பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
டிரான்ஸ்வாலிலும் ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டிலும் இருந்த இந்தியரின் நிலைமையைக் குறித்து விபரமாகக் கூறுவதற்கு இது இடமன்று. அதைக் குறித்த விபரமாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின் சரித்திரம் என்ற நூலில் பார்க்குமாற யோசனை கூறுகின்றேன். என்றாலும் அதைக் குறித்து இங்கே சுருக்கமாகக் கூற வேண்டியது அவசியம்.
ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில், 1858-ல் செய்யப்பட்ட விசேஷ சட்டத்தின் படி, இந்தியருக்கு முன்னால் இருந்த உரிமைகள் எல்லாமே பறிக்கப்பட்டு விட்டன. அங்கே இந்தியர் இருக்க விரும்பினால் ஹோட்டல்களில் வேலைக்காரர்களாக மாத்திரமே இருந்து வர முடியும். இல்லாவிடில் இதுபோன்ற கீழத்தரமான ஊழியம் செய்துகொண்டிருக்க வேண்டும் சொற்ப நஷ்ட ஈடு கொடுத்து, வியாபாரிகள் விரட்டப்பட்டு விட்டனர். விண்ணப்பங்களும் மகஜர்களும் அனுப்பினார்கள், ஒன்றும் பயனில்லை.
டிரான்ஸ்வாலில் 1885-ல் கடுமையான சட்டம் ஒன்றை இயற்றினர். 1886-ல் இச்சட்டத்தில் சிறுமாறுதல்களைச் செய்தார்கள். திருத்தப்பட்ட அச்சட்டத்தின்படி இந்தியர் எல்லோரும் டிரான்ஸ்வாலுக்குள் போவதற்குக் கட்டணமாக ஆளுக்கு 3 பவுன் தலைவரி செலுத்த வேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில் அல்லாமல் அவர்கள் வேறு எங்குமே சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், அனுபவத்தில் அந்த ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் நிலம் அவர்களுக்குச் சொந்தமாவதில்லை. இந்தியருக்கு வாக்குரிமை இல்லை. இவை யாவும் ஆசியாக்காரர்களுக்கு என்று செய்யப்பட்ட விசேஷச் சட்டத்தினால் நடந்தன. கறுப்பர்களுக்கு என்று இயற்றப்பட்ட சட்டங்களும் அவர்கள் விஷயத்தில் அமுல் செய்யப்பட்டன. பின்னால் கூறிய இச்சட்டங்களின் படி, இந்தியர் பொது நடைபாதைகளில் நடக்கக் கூடாது அனுமதிச்சீட்டு இல்லாமல் இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும் கூடாது. இந்தக் கடைசி வீதி, இந்தியரைப் பொறுத்தவரையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் உபயோகிக்கப்பட்டு வந்தது. தங்களை, அரபுக்கள் என்று சொல்லிக் கொண்டவர்களுக்குச் சலுகை காட்டுவதற்காக இந்த விதியிலிருந்து அவர்களுக்கு விலக்களித்தார்கள். இவ்விதம் அளிக்கப்பட்ட விதி விலக்கும் இயற்கையாகவே போலீஸாரின் இஷ்டத்தைப் பொறுத்ததாகத்தான் இருந்து வந்தது.
அவ்விரு சட்டங்களினாலும் ஏற்பட்ட கஷ்டங்களை நான் அனுபவிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி இரவில் ஸ்ரீ கோட்ஸூடன் உலாவ வெளியே போவேன். இரவு 10 மணிக்கு முன்னால் வீடு திரும்புவதில்லை. போலீஸார் என்னைக் கைது செய்துவிட்டால் என்ன செய்வது ? இவ்விஷயத்தில் என்னை விட ஸ்ரீ கோட்ஸூக்குத் தான் அதிகக் கவலை. தம்முடைய நீக்ரோ வேலைக்காரர்களுக்கு அவர் அனுமதிச்சீட்டுக் கொடுப்பது ? வேலைக்காரனுக்குத் தான் எஜமான் இத்தகையச் சீட்டுக் கொடுக்கலாம். எனக்கும் ஒரு சீட்டு வேண்டும் என்று கேட்டிருந்தால், அப்படிச் சீட்டுக் கொடுக்க ஸ்ரீ கோட்ஸ் தயாராக இருந்தாலும், அவரால் கொடுக்க முடியாது. ஏனெனில் அவ்விதம் கொடுப்பது மோசடியாகக் கருதப்பட்டிருக்கும்.
ஆகவே, ஸ்ரீ கோட்ஸோ, அவருடைய நண்பர் ஒருவரோ, என்னை அரசாங்க அட்டர்னியான டாக்டர் கிராஸே என்பவரிடம் அழைத்துச் சென்றனர். நாங்கள் இருவருமே ஒரே இடத்தில் பாரிஸ்டரானவர்கள் என்பது தெரியவந்தது. இரவு 9 மணிக்குப் பிறகு வீட்டிற்கு வெளியே இருப்பதற்கு எனக்கு அனுமதிச்சீட்டு வேண்டியிருக்கிறது என்ற விஷயம் அவருக்கு அதிக வருத்தத்தை அளித்தது. எனக்கு அவர் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். எனக்கு அனுமதிச் சீட்டுக் கொடுப்பதற்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, எந்த நேரத்திலும் போஸீஸாரின் குறுக்கீடு இல்லாமல் நான் வெளியில் நடமாடுவதற்கு எனக்கு உரிமை அளித்து, ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தார். நான் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கடிதத்தை எப்பொழுதும் என்னிடம் வைத்திருந்தேன். உண்மையில் அக்கடிதத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பமே எனக்கு ஏற்பட வில்லையென்றால் அது தற்செயலேயன்றி வேறில்லை.
டாக்டர் கிராஸே என்னைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நாங்கள் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சொல்லலாம். நான் எப்பொழுதாவது அவர் வீட்டிற்குப் போவேன். ஜோகன்னஸ் பர்க்கில் பப்ளிக் பிராசிக்யூடராக இருந்த அவருடைய பிரபலமான சகோதரர், அவர் மூலம் எனக்கு அறிமுகமானார். போயர் யுத்தத்தின் போது, ஓர் ஆங்கில அதிகாரியைக் கொல்ல அவர் சதி செய்தார். என்று ராணுவக் கோர்ட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு. அவர் ஏழு வருடச் சிறைத் தண்டனையை அடைந்தார். அவர் வக்கீல் தொழில் செய்யக்கூடாது என்று நீதிபதிகளும் அவரைத் தடுத்து விட்டனர். ஆனால் யுத்தம் முடிந்ததும் அவரை விடுதலை செய்து விட்டனர். டிரான்ஸ்வாலில் வக்கீலாக இருக்க அவரை கௌரவமாக அனுமதித்து விடவே, வக்கீல் தொழிலை நடத்தி வரலானார்.
இந்தத் தொடர்புகள் பின்னால் என்னுடைய ராஜீய வாழ்க்கைக்கு உதவியாக இருந்ததோடு, என் பெரும் பகுதி வேலைகளையும் சுலபமாக்கி விட்டன.நடைபாதையில் நடப்பது சம்பந்தமாக இருந்த சட்ட விதிகள் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டத்தைக் கொடுத்தன. நான் எப்பொழுதுமே உலாவுவதற்குப் பிரஸிடெண்டு ( ஜனாதிபதி ) குரூகரின் வீடு அந்தத் தெருவில்தான் இருந்தது. அது மிகவும் அடக்கமான ஆடம்பரமில்லாத கட்டிடம். அதன் முன்னால் தோட்டமும் இல்லை. பிரிட்டோரியாவின் லட்சாதிபதிகள் பலருடைய வீடுகள் அவர் வீட்டைப் போல் அல்லாமல் அதிக ஆடம்பரமாக இருந்தன. ஜனாதிபதி குரூகரின் எளிய வாழ்வு, மிகப் பிரசித்தமானதாகும். அவர் வீட்டுக்கு முன்னாலிருந்த போலீஸ் காவலைக் கொண்டே அது ஒரு முக்கியமான அதிகாரியின் வீடு என்பது தெரியும். நான் எப்பொழுதும் அவ்வீட்டிற்கு எதிரிலுள்ள நடைபாதை வழியாக அங்கிருந்த போலீஸ் பாராக்காரனைக் கடந்து செல்வது வழக்கம் எந்த விதமான தடையோ, தகராறோ ஏற்பட்டதே இல்லை.
அங்கே காவலுக்கு இருந்த போலீஸ்காரனை அடிக்கடி மாற்றி வந்தார்கள். ஒரு நாள் அவ்விதம் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் எனக்குக் கொஞ்சமேனும் எச்சரிக்கை செய்யாமலும், நடைபாதையை விட்டுப் போய்விடும்படி சொல்லாமலும் என்னை உதைத்துத் தெருவில் தள்ளவிட்டார். நான் திகைத்துப் போனேன். அவர் இவ்விதம் நடந்து கொண்டதைக் குறித்து அவரிடம் நான் கேட்க முற்படுவதற்கு முன்னால் ஸ்ரீ கோட்ஸ் சப்தம் போட்டு என்னைக் கூப்பிட்டார். அவர் அச்சமயம் அந்த வழியாகக் குதிரைமீது வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து ஸ்ரீ காந்தி நடந்ததையெல்லாம் நான் பார்த்தேன். அந்த ஆள்மீது நீங்கள் வழக்குத் தொடருவீர்களானால், கோர்ட்டில் உங்களுக்காக நான் மகிழ்ச்சியுடன் சாட்சி சொல்வேன். இவ்வளவு முரட்டுத்தனமாக நீங்கள் தாக்கப்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்றார்.
அதற்கு நான், நீங்கள் வருந்த வேண்டாம் பாவம், அவருக்கு என்ன தெரியும் ? கறுப்பு மனிதர்கள் எல்லோரும் அவருக்கு ஒரே மாதிரிதான். என்னை இப்பொழுது நடத்தியதைப் போல அவர் நீக்கிரோக்களையும் நடத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய சொந்தக் குறை எதற்காகவும் கோர்ட்டுக்குப் போவதில்லை என்பதை நான் ஒரு விதியாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், அவர் மீது வழக்குத்தொடரும் உத்தேசமில்லை என்றேன். உடனே, ஸ்ரீ கோட்ஸ், உங்கள் உயரிய குணத்திற்கு அது சரி. ஆனால், அதைக் குறித்து மறுபடியும் சிந்தியுங்கள். இப்படிப்பட்டவனுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். பின்னர் அந்தப் போலீஸ்காரரிடம் பேசினார். அவரைக் கண்டித்தார். போலீஸ்காரர் போயர் ஆனபடியால் இருவரும் டச்சு மொழியில் பேசினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால், அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்படிக் கேட்பதற்கு அவசியமே இல்லை. ஏனெனில், அவரை முன்பே நான் மன்னித்து விட்டேன்.
ஆனால் திரும்பவும் அத்தெரு வழியாக நான் போகவே இல்லை. அந்த ஆள் இருந்த இடத்தில் வேறு ஆள் வந்திருக்கக் கூடும். இந்தச் சம்பவத்தை அறியாமல் புதிதாக இருக்கும் ஆளும் இதே போல நடந்து கொண்டுவிடக் கூடும். அனாவசியமாக நான் ஏன் இன்னும் ஓர் உதையை வலிய வாங்க வேண்டும் ? எனவே நான் வேறு வழியில் போகத் தொடங்கினேன். குடியேறியிருக்கும் இந்தியரிடம் எனக்குள்ள அனுதாபத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. இத்தகைய சட்ட விதிகள் சம்பந்தமாக முதலில் பிரிட்டிஷ் ஏஜண்டைப் பார்ப்பது, பிறகு அவசியம் என்று தெரிந்தால் பரீட்சார்த்தமாக ஒரு வழக்கைப் போட்டுப் பார்ப்பது என்பதைக் குறித்து இந்தியர்களுடன் விவாதித்தேன்.
இவ்விதம் அங்கே இந்தியருக்கு இருந்து வந்த மிகக் கஷ்டமான நிலையை, அதைப்பற்றிப் படிப்பதனாலும் கேள்விப்படுவதனாலும் மாத்திரம் அன்றி, என் சொந்த அனுபவங்களினாலும் மிக நன்றாக அறிந்துக்கொண்டேன். தென்னாப்பிரிக்கா, சுயமரியாதையுள்ள இந்தியனுக்கு உகந்த நாடன்று என்பதைக் கண்டேன். இத்தகைய நிலைமையில் மாறுதல் ஏற்படும்படி செய்வது எப்படி என்ற கேள்வியே என் மனத்தில் மேலும் மேலும் எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால், அப்பொழுது என்னுடைய முதன்மையான கடமை தாதா அப்துல்லாவின் வழக்கைக் கவனிப்பதே.