பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
பிரிட்டோரியாவில் நான் இருந்த அந்த ஓராண்டு, என் வாழ்க்கையிலேயே மிக மதிப்பு வாய்ந்த அனுபவத்தை எனக்கு அளித்தது. பொதுஜனப் பணியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இங்கேதான் கிடைத்தது. இங்கே அச்சேவைக்கான ஓரளவு ஆற்றலையும் பெற்றேன். என்னுள் சமய உணர்ச்சி ஜீவ சக்தியுள்ளதாக ஆனதும் இங்கேதான். சூமலும், வக்கீல் தொழில் சம்பந்தமான உண்மையான ஞானத்தையும் இங்கேதான் அடைந்தேன். தொழிலுக்குப் புதிதாக வரும் பாரிஸ்டர், அனுபவமுள்ள ஒரு பாரிஸ்டரிடம் அறிந்து கொள்ளும் விஷயங்களை இங்கே அறிந்து கொண்டேன். வக்கீல் தொழிலை என்னால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இங்கேதான் ஏற்பட்டது. அதே போல ஒரு வக்கீலின் வெற்றிக்கான ரகசியங்களையும் இங்கேதான் அறிந்தேன்.
தாதா அப்துல்லாவின் வழக்கு, சிறிய வழக்கே அல்ல. 4,, பவுன் கிடைக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கலில் இவ்வழக்கு ஏற்பட்டதால் கணக்குச் சம்பந்தமான நுணுக்கங்கள் இதில் அதிகம் இருந்தன. வழக்கிடப்பட்ட தொகையில் ஒரு பகுதி பிராமிசரி நோட்டுக்காகவும் பிராமிசரி நோட்டுகள் தருவதாகக் கூறியதற்கும் வரவேண்டிய தொகை. பிராமிசரி நோட்டுகள் மோசடியாக வாங்கப்பட்டவை. அவற்றிற்குப் போதுமான நியாயம் இல்லை என்பது பிரதிவாதி தரப்பு வாதம். இந்தச் சிக்கலான வழக்கில் உண்மையையும் சட்டத்தையும் பற்றிய விஷயங்கள் ஏராளமாக அடங்கியிருந்தன.
இரு தரப்பாரும் பெரிய அட்டர்னிகளையும் வக்கீல்களையும் அமர்த்தியிருந்தனர். ஆகவே, அவர்கள் வேலை செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்புக் கிடைத்தது. வாதியின் கட்சியை அட்டர்னிக்கு எடுத்துக் கூறுவதும், வழக்குச் சம்பந்தமான ஆதாரங்களைச் சேகரிப்பதுமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றில் அட்டர்னி எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார், நான் தயாரித்துக் கொடுப்பதில் எதை அவர் நிராகரித்து விடுகிறார் என்பதைக் கவனித்து வருவதே ஒரு போதனையாயிற்று. அதோடு அட்டர்னி தயாரித்துக் கொள்ளுகிறார் என்பதையும் நான் அறிய முடிந்தது. சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சாட்சியங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் எனக்குள்ள திறமையை அளந்து அறிவதற்குச் சாத்தியமானதாக இந்த வழக்குத் தயாரிப்பு வேலை உதவுவதையும் கண்டேன்.
இந்த வழக்கில் மிக அதிகமான சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதில் நான் முற்றும் மூழ்கியிருந்தேன் என்றே சொல்ல வேண்டும். பற்று வரவு சம்பந்தமான எல்லாத் தஸ்தாவேஜுகளையும் படித்தேன். என் கட்சிக்கார். அதிகத் திறமைசாலி. என்னிடம் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதனால் என் வேலை எளிதாயிற்று. கணக்கு வைக்கும் முறையைக் குறித்தும் ஓரளவுக்குப் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன். கடிதப் போக்குவரத்துக்களெல்லாம். பெரும்பாலும் குஜராத்தியிலேயே இருந்ததால் அவற்றை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று. இதனால் மொழிபெயர்க்கும் ஆற்றலும் எனக்கு அதிகமாயிற்று.
நான் முன்னால் கூறியிருப்பதைப்போல், சமய சம்பந்தமான விஷயங்களிலும், பொது வேலைகளிலும் நான் அதிக சிரத்தை கொண்டிருந்தபோதிலும் என் நேரத்தில் கொஞ்சத்தை அவற்றிற்குச் செலவிட்டு வந்தாலும், அப்பொழுது எனக்கு அதிக முக்கியமானவையாக இருந்தவை அவை அல்ல, எனக்கு இருந்த முக்கியமான சிரத்தையெல்லாம் வழக்குச் சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பதே, சட்டத்தைப் படிப்பது, அவசியமாகும் போது அச்சட்ட சம்பந்தமான வழக்குகளைத் தேடியெடுப்பது ஆகியவைகளில் ஈடுபட்டு, மிஞ்சிய நேரங்களில்தான் மற்ற வேலைகளைக் கவனிப்பேன். இதன் பலனாக, வழக்கின் இரு தரப்பினரின் தஸ்தாவேஜுகளெல்லாம் என்னிடம் இருந்ததால் கட்சிக்காரர்களையும்விட நன்றாக வழக்கைப்பற்றிய விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தன.
காலஞ்சென்ற ஸ்ரீபின்கட், விவரங்களே சட்டத்தில் முக்கால் பாகம் என்று புத்திமதி கூறியிருந்தார். அதை நான் நினைவு படுத்திக் கொண்டேன். தென்னாப்பிரிக்காவின் பிரபல பாரிஸ்டரான காலஞ்சென்ற ஸ்ரீ லியோனார்டும் இந்த உண்மையைப் பின்னால் உறுதிப்படுத்தினார். என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் என் கட்சிக்காரர் பக்கம் நியாயம் இருந்தாலும், சட்டம் அவருக்கு விரோதமாக இருப்பதாகத் தோன்றியதைக் கண்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீ லியோனார்டின் உதவியை நாடினேன். அவ்வழக்கின் விவரங்கள் அதிக அனுகூலமாக இருக்கின்றன என்று அவர் கருதினார். அவர் பின்வருமாறு கூறினார். ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டிருக்கிறேன். வழக்கைப் பற்றிய விவரங்களை நாம் இன்னும் ஆழ்ந்து கவனிப்போம். அவர் என்னிடம் இவ்விதம் கூறி, வழக்கைப்பற்றி மேலும் ஆராய்ந்து கொண்டு, மீண்டும் தம்மை வந்து பார்க்கும் படி கூறினார். விவரங்களை நான் திரும்ப ஆராய்ந்தபோது அதே விவரங்கள் எனக்குப் புதியவிதமாகத் தென்பட்டன. இதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு பழைய தென்னாப்பிரிக்க வழக்கும் எனக்கு அகப்பட்டது. அதிக ஆனந்தம் அடைந்தேன். ஸ்ரீ லியோனார்டிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னேன். சரி, வழக்கில் வெற்றி பெற்றுவிடுவோம். ஆனால், எந்த நீதிபதி இதை விசாரிக்கப் போகிறார் என்பதை மாத்திரம் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
தாதா அப்துல்லாவின் வழக்குக்கு வேண்டிய காரியங்களை நான் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, ஒரு வழக்கில் விவரங்களே அதிக முக்கியமானவை என்பதை நான் முற்றும் உணர்ந்து கொள்ளவில்லை. விவரங்கள் என்பவை, உண்மையாக நடந்த செயல்களாகும். நாம் உண்மையை அனுசரித்துப் போனால் இயற்கையாகவே சட்டம் நம் உதவிக்கு வருகிறது. தாதா அப்துல்லாவின் வழக்கில், விவரங்கள் மிகவும் அனுகூலமானவைகளாக இருந்ததால் சட்டமும் நிச்சயமாக அவருக்கு அனுகூலமாகவே இருக்கும் என்பதைக் கண்டேன். வாதியும் பிரதிவாதியும் உறவினர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆனால், விவகாரம் தொடர்ந்து நடத்தப்படுமானால் இரு தரப்பினருமே அழிந்துவிடுவார்கள் என்பதையும் கண்டு கொண்டேன். வழக்கு எவ்வளவு காலத்திற்கு நடந்த கொண்டு போகும் என்பது யாருக்கும் தெரியாது. கோர்ட்டில் வழக்காடி ஒரு முடிவுக்கு வந்தே தீருவது என்று, வழக்கைத் தொடர்ந்து நடக்க விட்டுவிட்டால் காலவரையறையின்றி அது நடந்து கொண்டே போகும். இதனால் இரு தரப்பாருக்கம் நன்மை இல்லை. ஆகையால், வழக்கு உடனேயே தீர்ந்துவிடுவது நல்லது என்று இரு தரப்பாரும் விரும்பினார்கள்.
தயாப் சேத்திடம் போய், வழக்கை மத்தியஸ்தத்திற்கு விட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு யோசனையும் கூறினேன். அவர் வக்கீலிடமும் அதைக் குறித்து யோசிக்கும்படியும் கூறினேன். இரு தரப்பினருக்கும் நம்பிக்கை வாய்ந்த ஒருவரை மத்தியஸ்தராக நியமித்து விட்டால் வழக்கு சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்றும் யோசனை கூறினேன். கட்சிக்காரர்கள் இருவரும் பெரிய வியாபாரிகள். என்றாலும், அவர்களுடைய வசதிகள் எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் அளவுக்கு, வக்கீல் கட்டணங்கள் பெருகிக்கொண்டே போயின. அவர்கள் இருவரின் கவனம் முழுவதும் இந்த வழக்கிலேயே ஈடுபட்டிருந்ததால் மற்ற வேலைகளைக் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரமே இல்லை. இதற்கிடையே ஒருவருக்கொருவர் விரோதமும் வளர்ந்து கொண்டு போயிற்று. இத் தொழிலில் எனக்கு வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. இரு தரப்பு வக்கீல்களும் அவர்கள் வக்கீல்கள் என்ற முறையில் அவரவர்கள் தரப்புக்குச் சாதகமான சட்ட நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே இருக்க வேண்டியது. அவர்களுடைய கடமையாயிற்று. வெற்றி பெறும் கட்சிக்காரர், தாம் செலவழித்த தொகை முழுவதையும் செலவுத் தொகையாக எதிர்த் தரப்பிலிருந்து பெற்று விடுவதில்லை என்பதையும் முதன் முதலாக அப்பொழுது தான் நான் கண்டேன். கோர்ட்டுக் கட்டணச் சட்டததின் படி வாதி, பிரதிவாதிகளுக்கு இவ்வளவுதான் செலவுத் தொகையாக அனுமதிக்கலாம் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அட்டர்னிக்குக் கட்சிக்காரர் உண்மையில் கொடுக்கும் தொகையோ, அந்த விதிகளில் கண்டதற்கு மிக அதிகமாக இருந்தது. இதையெல்லாம் என்னால் சகிக்க முடியவில்லை. இரு தரப்பினரிடமும் நட்புக் கொண்டு, இருவரையும் சமரசம் செய்து வைத்துவிடுவதுதான் எனது கடமை என்பதை உணர்ந்தேன். சமரசம் செய்து வைத்துவிட என்னாலான முயற்சிகளையெல்லாம் செய்தேன். கடைசியாக தயாப் சேத்சம்மதித்தார். ஒரு மத்தியஸ்தரும் நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் வழக்கு விவாதிக்கப்பட்டு, தாதா அப்துல்லா வெற்றி பெற்றார்.
ஆனால் அதோடு நான் திருப்தி அடைந்து விடவில்லை. தீர்ப்பான தொகையை. என் கட்சிக்காரர் உடனே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதென்றால், தீர்ப்புத் தொகை முழுவதையும் உடனே கட்டி விடுவதென்பது தயாப் சேத்தினால் முடியாத காரியம். மேலும், தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த போர்பந்தர் மேமன்களிடம் உறுதியான கொள்கை ஒன்று இருந்தது. பட்ட கடனைச் செலுத்த முடியாமல், இன்ஸால்வென்ட்டாகி விடுவதை விடச் செத்துவிடுவது மேல் என்பது அவர்கள் கொள்கை. மொத்தத் தொகையான 37,000 பவுனையும், செலவுத் தொகையும் உடனே செலுத்திவிடுவது என்பது தயாப் சேத்தினால் முடியாது. ஒரு தம்படியும் குறையாமல் முழுத் தொகையையும் செலுத்திவிடவே அவர் விரும்பினார்.
இன்ஸால்வென்ட்டாகி விடவும் அவர் விரும்பவில்லை. இதற்கு ஒரே வழிதான் உண்டு. நியாயமான தவணைகளில் அத்தொகையைப் பெறத் தாதா அப்துல்லா ஒப்புக்கொள்ள வேண்டும். அவரும் இணங்கினார். நீண்டகாலத் தவணையில் தயாப் சேத் பணம் கட்டுவதை அனுமதிக்க ஒப்புக்கொண்டார். வழக்கை, மத்தியஸ்தத்திற்கு விடுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்கும்படி செய்வதைவிடத் தொகையைத் தவணையில் செலுத்துவது என்ற சலுகையைப் பெறுவதில்தான் எனக்கு அதிகச் சிரமம் இருந்தது. ஆனால் ஏற்பட்ட முடிவைக் குறித்து, இரு தரப்பாரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொது ஜனங்களிடையே அவர்களுடைய மதிப்பும் உயர்ந்தது. எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. உண்மையான வக்கீல் தொழிலை நான் கற்றுக் கொண்டேன். பிளவுப்பட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலரின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தப் பாடம் என்னுள் அழிக்க முடியாதபடி நன்றாகப் பதிந்துவிட்டது. ஆகையால் நான் வக்கீலாகத் தொழில் நடத்திய இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வழக்குகளில், தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்துவிடுவதிலேயே என் காலத்தின் பெரும் பகுதி கழிந்தது. இதனால் எனக்கு நஷ்டம் எதுவுமே இல்லை. பண நஷ்டமும் இல்லை, நிச்சயமாக ஆன்ம நஷ்டம் இல்லவே இல்லை.