பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
கிறிஸ்தவ நண்பர்களிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்துத் திரும்பவும் சொல்ல வேண்டிய சமயம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. எனது வருங்காலத்தைப் பற்றிய கவலை ஸ்ரீ பேக்கருக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. வெல்லிங்டனில் நடந்த மகாசபைக்கு அவர் என்னைப் அழைத்துச் சென்றார். சமயத் தெளிவைப் பெறுவதற்கு அதாவது வேறுவிதமாகச் சொன்னால் சுயத் தூய்மையைப் பெறும் பொருட்டு என்று புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள், இத்தகைய மகாசபைகளைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டுவது வழக்கம். சமயத்தைச் சீராக்குவது அல்லது சமய புனருத்தாரணம் என்ற இதைச் சொல்லலாம். வெல்லிங்டன் மகாசபையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அந்த மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் அப் பகுதியில் பிரசித்தமாயிருந்த பாதிரியாரான பூஜ்ய ஆண்ட்ரு மர்ரே என்பவர். அந்த மகா சபையில் இருக்கும் பக்திப் பரவசச் சூழ்நிலையும். அதற்கு வந்திருப்பவர்களின் உற்சாகமும் சிரத்தையும் என்னைக் கட்டாயம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவும்படி செய்தே தீரும் என்று ஸ்ரீ பேக்கர் நம்பியிருந்தார்.
அவருடைய முடிவான நம்பிக்கையெல்லாம் பிரார்த்தனையின் சக்தியிலேயே இருந்தது. பிரார்த்தனையில் அவர் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். மனப்பூர்வமான பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமல் இருந்து விடமாட்டார் என்றும் அவர் திடமாக நம்பினார். இதற்குப் பிரிஸ்டலின் ஜார்ஜ் முல்லர் போன்றவர்களின் உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறுவார். அவர், தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூடக் கடவுளைப் பிரார்த்தித்துவிட்டு, அவரையே நம்பி இருந்துவிடுவாராம். பிரார்த்தனையின் சக்தியைக் குறித்து அவர் கூறுவதை யெல்லாம் எவ்விதத் துவேசமும் இல்லாத கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். "என் மனச் சாட்சி மாத்திரம் ஆக்ஞாபித்து விடுமாயின் நான் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவி விடுவேன் இவ்விதம் நான் செய்வதை எதுவும் தடுத்து விட முடியாது" என்று அவரிடம் உறுதி கூறினேன். அந்தராத்மா காட்டும் வழயில் நடக்க நான் நீண்ட காலமாகவே கற்றுக் கொண்டிருந்ததால், எந்தவிதத் தயக்கமும் இன்றி அவருக்கு இந்த வாக்குறதியை நான் அளித்தேன். அதற்கு விரோதமாக நடப்பதென்றால், முடியாது என்பதோடு, அது எனக்கு வேதனையாகவும் இருக்கும்.
எனவே, நாங்கள் வெல்லிங்டனுக்குச் சென்றோம். என்னைப் போன்ற, "கறுப்பு மனிதனை" அழைத்துப் போய் அங்கே சமாளிப்பது ஸ்ரீ பேக்கருக்குக் கஷ்டமாகிவிட்டது. முற்றும் என்னாலேயே பல சமயங்களிலும் அசௌகரியங்களை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பிரயாணத்தின் நடுவில் ஞாயிற்றுக்கிழமை குறுக்கிட்டது. ஸ்ரீ பேக்கரும் அவருடைய சகாக்களும் புண்ணிய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரயாணம் செய்யமாட்டார்கள். ஆகவே இடையில் ஒரு நாள் பிரயாணத்தை நிறுத்த வேண்டி வந்தது. ஸ்டேஷன் ஹோட்டல் மானேஜர் எவ்வளவோ விவாதத்திற்குப் பிறகு என்னை ஹோட்டலில் வைத்துக் கொள்ளச் சம்மதித்த போதிலும் சாப்பாட்டு அறையில் என்னை அனுமதிக்க மாத்திரம் மறுத்துவிட்டார். எளிதில் விட்டுக் கொடுக்கிறவர் அல்ல, ஸ்ரீ பேக்கர். ஹோட்டலில் வந்து தங்குகிறவர்களின் உரிமையைக் குறித்து அவர் எவ்வளவோ வாதாடினார். என்றாலும், அவருக்கு இருந்த கஷ்டத்தை நான் அறிய முடிந்தது. வெல்லிங்டனிலும் நான் ஸ்ரீ பேக்கருடனேயே தங்கினேன். என்னால் அவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை மறைக்க அவர் என்னதான் முயன்ற போதிலும் அவற்றை நான் அறியாமல் இல்லை.
இந்த மகாசபை, பக்தியுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்டது. அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். பூஜ்யர் மர்ரேயையும் சந்தித்தேன். பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்ததையும் கண்டேன். அவர்களுடைய சில தோத்திர கீதங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவை இனிமையாகவும் இருந்தன. மகாசபை மூன்று நாட்கள் நடந்தது. அதற்கு வந்திருந்தவர்களின் பக்தியை நான் அறியவும் பாராட்டவும் முடிந்தது. ஆனால் என் நம்பிக்கையை - என் மதத்தை - மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தவிதமான காரணத்தையும் நான் அங்கே காணவில்லை. கிறிஸ்தவனாக ஆகிவிடுவதனால் மாத்திரமே நான் சுவர்க்கத்திற்குப் போகமுடியும், முக்தியை அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நல்லவர்களான கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் இவ்விதம் நான் மனம் விட்டுச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால், நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை.
எனக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக் கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம்.
ஆனால், அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றச் சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்கள் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை கிறிஸ்தவர்களிடையே பலர் புண்ணிய சீலர்களாகத் திருந்தி இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையிலும் அதே மாறுதலை நான் கண்டிருக்கிறேன். தத்துவ ரீதியில் கிறிஸ்தவக் கொள்கையில் அசாதாரணமானது எதுவும் இல்லை, தியாகத்தைப் பொறுத்த வரையில் பார்த்தால், ஹிந்துக்கள் இதில் கிறிஸ்தவர்களையும் மிஞ்சியிருக்கின்றனர். கிறிஸ்தவமே பரிபூரணமான மதம் என்றோ, எல்லா மதங்களிலும் அதுவே தலை சிறந்தது என்றோ நம்ப என்னால் முடியவில்லை. என் மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்களையெல்லாம் சமயம் நேர்ந்தபோதெல்லாம் எனது கிறிஸ்தவ நண்பர்களிடம் கூறுவேன். ஆனால் இவற்றிற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. கிறிஸ்தவ மதமே பரிபூரணமான மதம் என்றோ, தலைசிறந்த மதம் என்றோ என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லையென்றால், ஹிந்து சமயம் பரிபூரணமானது, தலைசிறந்தது என்றும் அப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தோன்றிவிடவில்லை.
தீண்டாமை, ஹிந்து சமயத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியுமாயின், அது அதன் அழுகிப் போன பகுதியாகவோ அல்லது சதைச் சுரப்பாகவோதான் இருக்க வேண்டும். ஏராளமான பரிவுகளும் சாதிகளும் இருப்பதற்கான நியாயமும் எனக்கு விளங்கவில்லை. கடவுள் வாக்கே வேதங்கள் என்று சொல்லுவதன் பொருள் என்ன ? அவை கடவுளால் கூறப்பட்டவையாக ஏன் இருக்கலாகாது ? என்னை மதம் மாற்றுவதற்குக் கிறிஸ்தவ நண்பர்கள் எவ்விதம் முயன்று வந்தனரோ அது போலவே முஸ்லிம் நண்பர்களும் முயன்றனர். இஸ்லாமிய நூல்களைப் படிக்குமாறு அப்துல்லா சேத், விடாமல் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார். எப்பொழுதும் அவர் இஸ்லாமின் சிறப்பைக் குறித்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு இருந்த கஷ்டங்களைக் குறித்து ராய்ச்சந்திர பாய்க்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன். சமயத் துறையில் வல்லுநராக இந்தியாவில் இருந்தவர்களுக்கும் எழுதினேன். அவர்களிடமிருந்தும் எனக்குப் பதில்கள் கிடைத்தன. ராய்ச்சந்திரரின் கடிதம் ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதியை அளித்தது. பொறுமையுடன் இருக்குமாறும், ஹிந்து தருமத்தைக் குறித்து இன்னும் ஆழ்ந்து படிக்குமாறும், அவர் எழுதியதில், ஒரு வாக்கியம் பின்வருமாறு, இவ்விஷயத்தை விருப்பு வெறுப்பின்றிக் கவனித்ததில் ஒன்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. ஹிந்து மதத்தின ஆழ்ந்த, அற்புதமான கருத்துக்களும், ஆன்ம ஞானமும், தயையும் வேறு எந்த மதத்திலும் இல்லை என்பதே அது.
ஸேல்ஸ் என்பவரின் குரான் மொழிபெயர்ப்பு நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இஸ்லாமைப்பற்றிய வேறு சில நூல்களையும் வாங்கினேன். இங்கிலாந்திலிருந்த கிறிஸ்தவ நண்பர்களுக்கும் எழுதினேன். அவர்களில் ஒருவர், எட்வர்டு மெய்ட்லண்டுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டேன் பரிபூரணமான வழி என்ற நூலை அவர் எனக்கு அனுப்பினார். அன்னா கிங்ஸ்போர்டுடன் சேர்ந்து அவர் இந்நூலை எழுதியிருந்தார். இப்பொழுது இருந்து வரும் கிறிஸ்தவ நம்பிக்கைகளை இந்நூல் மறுக்கிறது. "பைபிளுக்குப் புதிய வியாக்கியானம்" என்ற மற்றொரு புத்தகத்தையும் அவர் எனக்கு அனுப்பினார். அவ்விரு புத்தகங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. அவை, ஹிந்து தருமத்தை ஆதரிப்பனவாகத் தோன்றின. "உன்னுள்ளேயே ஆண்டவன் ராஜ்யம்" என்ற டால்ஸ்டாயின் நூல், என்னைப் பரவசப்படுத்தி விட்டது. அதில் கண்ட கருத்துக்கள் என் உள்ளத்தில் பலமாகப் பதந்துவிட்டன. அந்நூல் கண்ட சுயேச்சையான சிந்தனை, மிகச் சிறந்த ஒழுக்கம், உண்மை ஆகியவற்றின் முன்பு ஸ்ரீ கோட்ஸ் எனக்குக் கொடுத்திருந்த புத்தகங்கள் எல்லாமே ஒளி இழந்து. அற்பமானவைகளாகத் தோன்றின. இவ்விதம் என்னுடைய ஆராய்ச்சி, கிறிஸ்தவ நண்பர்கள எதிர் பாராத திக்குக்கு என்னைக் கொண்டுபோய் விட்டது. எட்வர்டு மெயிட்லண்டுடன் நீண்ட காலம் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தேன். ராய்ச்சந்தர பாய் இறக்கும் வரையில் அவருடனும் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தேன். அவர் அனுப்பிய சில புத்தகங்களையும் படித்தேன் பஞசீகரணம், மணிரத்தினமாலை, யோகவாசிஷ்டத்தின் முமுட்சுப்பிரகணம், ஹரிபத்ர சூரியின் சத் தரிசன சமுச்சயம் முதலியவைகளும் அவைகளில் சேர்ந்தவை.
என் கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத ஒரு வழியை நான் மேற்கொண்டேனாயினும், என்னுள் அவர்கள் எழுப்பிய சமய வேட்கைக்காக நான் அவர்களுக்கு என்றும் கட்டுப்பாடு உடையவனாக இருக்கிறேன். அவர்களுடன் பழகியதைப் பற்றிய நினைவை நான் என்றும் போற்றி வருவேன். இத்தகைய இனிமையான, புனிதமான தொடர்புகள், அதற்குப் பின்னாலும் எனக்கு திடமாக இருந்தனவே அன்றிக் குறையவில்லை.