விருதுநகர் : விருதுநகரில் விஜயதசமியை முன்னிட்டு இளைஞர்கள் புலி வேஷமிட்டு முக்கிய ரோடுகளில் ஆடி வந்தனர்.
விருதுநகரில் விஜயதசமி நாளன்று விருதுநகரில் இளைஞர்கள் புலி வேடமிட்டு ஆடி வருவது வழக்கம். இதற்காக ஸ்பெஷலாக ஆடை தைத்து புலி வேடமிட்டு ஆடுபவர்களுடன் , சிலம்பம், சுருள், மான் கொம்பு சுற்றி தங்களது வீரவிளையாட்டுகளை வெளிப்படுத்துவர். புலி வேஷம் போடுபவர்களுக்கு ஆடைகளை பரம்பரையாக தைத்து கொடுக்கும் தையல் கடைகளும் உண்டு.
இந்த விழாவிற்காக, இளைஞர்கள் புலிக்குரிய வர்ணம் பூசி கொள்வர். இடுப்பிற்கு கீழ் வர்ணம் பூச முடியாது என்பதால் அங்கு மட்டும் புலி நிறத்தில் துணி வாங்கி தைத்து போடுவார்கள். இவ்வாறு புலி வேடமிட்டு வீதிகளில் ஆடி வருவதை பார்க்க மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள். இவ்விழாவிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டனர். காலையில் துவங்கி புலியாட்டம் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.