பதிவு செய்த நாள்
12
அக்
2016
01:10
திருத்தணி: தொடர் விடுமுறையால் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த, 8ம் தேதி முதல், இன்று (12ம் தேதி) வரை தொடர் விடுமுறை ஏற்பட்டதால் வழக்கத்திற்கு மாறாக முருகன் மலைக் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்கின்றனர். நேற்று, பொது தரிசன வழியில், பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். மேலும், நேற்று, விஜயதசமியை முன்னிட்டு, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதுதவிர, நேற்றுடன், நவராத்திரி விழா முடிவடைந்ததால், கஜலட்சுமி அம்மையார் மற்றும் உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு, திருத்தணி நகர், எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள படாசெட்டி குளத்திற்கு அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:45 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.