திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை பராமரிப்பு: துணை கமிஷனர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2016 11:10
மதுரை: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் இறப்புக்கு ஆக்சிஜன் குறைவாக இருந்தது காரணம் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். சரவணப்பொய்கையை பராமரிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பா.ஜ., நிர்வாகிகளுக்கு துணை கமிஷனர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: செப்.,4ம் தேதி சரவணப் பொய்கையில் இறந்த மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மீன் வளத்துறை உதவி இயக்குனர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தண்ணீரில் நச்சுத்தன்மை பொருள் கலக்கப்படவில்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் குறைபாடு மீன்கள் இறப்புக்கு காரணம். ஆக்சிஜன் கிடைக்க தண்ணீரை சுழற்சி முறையில் பயன்படுத்த மூன்று மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஒன்று செயல்படுகிறது. அங்குள்ள பொது சுகாதார வளாகம் மாநகராட்சியால் கட்டப்பட்டு இதுவரை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைத்தால், பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி, துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தினால் மட்டுமே சரவணப்பொய்கையை பாதுகாக்க இயலும் என தெரிவித்துள்ளார்.