பதிவு செய்த நாள்
13
அக்
2016
12:10
திருப்பூர்: "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், சிவன்மலை கிரிவலப்பாதையில், மரக்கன்றுகள் நடுவதற்காக, குழி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. காங்கயம் பகுதியில் உள்ள "வேர்கள் அமைப்பு, "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் இணைந்து, மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது. காங்கயம்பாளையத்தில், கொப்பரை களங்களில் பயன்படுத்தப்படும் "சல்பர் காரணமாக, காற்று மாசு அதிகரித்துள்ளது. மக்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்னைகள், நோய்களுக்கு தீர்வு காணவும், வறட்சி பகுதியில் பசுமையை உருவாக்கும் வகையிலும், இளைஞர்கள் இணைந்து, "வேர்கள் அமைப்பை துவக்கினர். கிராமத்துக்கு செல்லும் ரோடுகள், நீர்நிலை பகுதிகள் என, இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு, பசுமை பரப்பை அதிகரித்து வருகின்றனர். தற்போது, பழமை வாய்ந்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கிரிவலப்பாதையில் மரக்கன்று நடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையின் இரு புறமும், பக்தர்களுக்கு நிழலும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையில், அரசு, ஆலமரம், அத்தி ஆகிய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நடப்படும் மரக்கன்றுகளுக்கு முழுமையாக, சொட்டு நீர் பாசனம் அமைத்து பராமரிக்க, தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர். இதற்காக, "வனத்துக்குள் திருப்பூர் திட்ட பொக்லைன் இயந்திரம் மூலம், மரக்கன்று நடுவதற்கான குழிகள் எடுக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.