பதிவு செய்த நாள்
30
ஆக
2016
03:08
கேகய நாட்டுக்கு வந்த துர்வாசர், அசுவபதி, உன் நாட்டை ஒட்டிய வனத்தில் நான் தவம் செய்ய உத்தேசித்துள்ளேன். இடையூறு நேராமல் பாதுகாக்க வேண்டும் என்றார் துர்வாசர். அப்படியே செய்வதாகப் பணிந்த கொற்றவன், துர்வாசர் குறிப்பிட்ட இடத்தைத் திருத்தி, சுற்றிலும் வேலியிட்டு அமைத்துத் தந்தான். தவத்தைத் துவக்கிய துர்வாசர், ஆழ்நிலைக்குச் சென்றார். தவழ்ந்து விளையாடிய அசுவபதியின் மகள் கைகேயி ஓடிவிளையாடும் நிலைக்கு மாறினாள். ஒருநாள் கண்ணாமூச்சி ஆட்டம். ஒளிந்து கொள்ள இடம் தேடிய கைகேயி, துர்வாசர் தவம் புரியும் இடத்துக்கு வந்தாள். துர்வாசரைப் பார்த்தாள். ரிஷிகள் உட்கார்ந்த நிலையில் சமாதியாகி விடுவார்கள் என்று பவுராணிகர் கூறினாரே. ஒருவேளை இவரும் அப்படி உயிரை விட்டிருப்பாரோ என நினைத்தவள், மெதுவாக ஆட்காட்டி விரலை அவர் மூக்கினுள் நுழைத்தாள்.
நிஷ்டை கலைந்த துர்வாசர், துஷ்டப் பெண்ணே, என் நாசியுள் நுழைந்த உன் விரல் இரும்பாகக் கடவது என சபித்தார். இதற்குள் இளவரசியைக் காணாத தோழியர் அரண்மனையில் புகார் சொல்ல, மகளைத் தேடி துர்வாசர் தவம் புரியும் ஆரண்யத்துள் நுழைந்தான் அசுவபதி. மகளைக் கண்டு, விவரம் அறிந்த முனிவரை நமஸ்கரித்தான். மகரிஷே, அறியாச் சிறுமி, விளையாட்டாய் செய்து விட்டாள். ஒரு விரல் இரும்பாயிருந்தால் என் மகளுக்கு எப்படித் திருமணமாகும்? தயவு செய்து சாபத்தை மாற்றுங்கள் எனக் கெஞ்சினான் அசுவபதி. துர்வாசர், அசுவபதி, உன் குமாரி விரும்பும்போது அந்த விரல் இரும்பாகும் என திருத்தம் செய்தார். காலம் உருண்டது. அயோத்தி மன்னர் தசரதர் கௌசல்யை, சுமித்திரை என்ற இரு ராஜகுமாரியரை மணந்தும் பிள்ளைச் செல்வம் வாய்க்காததால் கேகய நாட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றபோது, என் புதல்வி கைகேயிக்குப் பிறக்கும் புதல்வனே அரியணை ஏற வேண்டும் என நிபந்தனை விதித்தான் மன்னன். கைகேயியின் சவுந்தர்யத்தில் மயங்கிய தசரதர் சம்மதிக்க, விவாகம் சிறப்பாக நடந்தது.
வைஜயந்தம் என்ற நாட்டை ஆண்ட சம்பராசுரனை வெல்ல தசரதனின் உதவியை நாடினான் இந்திரன். தசரதர் ஒரே நேரத்தில் பத்து ரதாதிபதிகளோடு யுத்தம் செய்யும் வல்லமை பெற்றவர். அதனால் தான் தச+ரதர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. தசரதர் தடுத்தும் கவசம் பூண்டுதானும் அவரோடு புறப்பட்டாள் கைகேயி. தேரோட்டுவதில் வல்லமை பெற்றவள் கேகய இளவரசி. பதினொரு தினங்களாக யுத்தம் நடந்தும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்காத போர், பன்னிரெண்டாம் நாள் உக்கிரமாக நடக்கிறது. சிறிது அயர்ந்தாலும் தசரதர் பக்கம் தோற்று விடும் நிலைமை. தேர் ஒருபுறமாகச் சாய்கிறது. ஏனென்று பார்த்தாள் கைகேயி. கடையாணி கழன்று கொண்டிருந்தது. துர்வாசரைத் தியானித்துத் தன் ஆட்காட்டி விரல் இரும்பாக வேண்டும்மென்று எண்ணி, தேர்ச்சக்கரம் கழலாத படி விரலை அதில் திணித்தாள். ரதம் குடை சாயாது காத்தாள். அதேநேரம், தசரதர் விட்ட பாணம் சம்பராசுரன் உயிரைக் குடித்தது. தசரதர், தேவி, நுணுக்கமாக தேரைச் செலுத்தி வெற்றி காண உதவிய உனக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இரண்டு வரங்கள் தருகிறேன். என்ன வேண்டும் எனக் கேட்டார். ஸ்வாமி, தாங்களே எனக்கு வரம்தான். தேவைப்படும்போது, அந்த வரங்களைப் பெற்றுக் கொள்கிறேன் என்றாள் கைகேயி. அவள் இரு வரங்களைக் கேட்டபோது, அவள் மனம் இரும்பாயிருந்தது. அன்று பதியின் உயிரைக் காத்தவள், வரம் கேட்ட போது தானே யமனானாள்.