கடவுளை அன்பால் பூஜித்தல், ஆகமமுறையில் பூஜித்தல், பயன் கருதி பூஜித்தல், பயன் கருதாமல் பூஜித்தல் என நால்வகையாக வழிபடுவர். இம்முறைகள் அனைத்தும் முருகப்பெருமானுக்கு பொருந்தும். குறவர்கள் செய்யும் வழிபாடு அன்பு வழிபாடு என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கலித்தொகையில் உள்ள குறிஞ்சிக்கலியில் குறவர்களின் அன்பு வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது. கோவில்களில் மந்திரங்கள், புஷ்பங்கள் சமர்ப்பித்து அந்தணர்கள் செய்யும் பூஜையே ஆகம வழிபாடு. முடி காணிக்கை, காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தி முருகனை வழிபடுதல் பயன்கருதிச் செய்யும் வழிபாடு. எந்த கோரிக்கையுமின்றி ஆன்மநெறியில் செய்யும் வழிபாடே, பயன் கருதாமல் செய்வதே ஞான வழிபாடு. சித்தர்கள் இதைச் செய்தனர். போகர் என்னும் சித்தரின் குருவாகவும், தெய்வமாகவும் விளங்கியவர் முருகன். இவரே பழநியில் தண்டாயுதபாணி என்னும் திருப்பெயர் தாங்கி அருள் காட்சி தருகிறார்.