உடுமலை: ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா அக்டோபர் 31ல் துவங்குகிறது. உடுமலை அருகே பாப்பான்குளத்தில் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி சுக்லபட்ச சஷ்டி சூரசம்ஹார பெருவிழா அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் காலையில் விக்னேஸ்வர பூஜையும், மாலையில் மயூர வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் இடம்பெறுகின்றன. நவம்பர் முதல் தேதி மாலையில் ஆட்டுகிடா வாகனத்தில் வீதியுலாவும், 2ம் தேதி யானை வாகனத்திலும், 3ம் தேதி சின்னமயில் வாகனத்திலும், 4ம் தேதி சந்தியா கால அபிேஷகமும் நடக்கின்றன. வரும் 5ம் தேதி மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹாரமும், 6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு,9:15 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறுகின்றன. விழா நாட்களில் கோவை அரசு இசைக்கல்லுாரி பேராசிரியர் செந்தமிழ்செல்வனின் கந்தபுராணம் தமிழிசை தொடர் சொற்பொழிவு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி நற்பணி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.