பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
சேலையூர் : சேலையூர் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று துவங்கி, ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. சேலையூர், அவ்வை நகரில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. அங்கு, கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, மூன்றாம் ஆண்டு சூரசம்ஹார திருவிழா நேற்று துவங்கியது. ஏழு நாட்களுக்கு நடைபெறும் விழாவில், முதல் நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகலச பூஜை, அபிஷேகம், சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு திருக்காப்பு கட்டுதல் மற்றும் முளையாடுதல் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு, தினசரி சிறப்பு அபிஷேகமும், பல்வேறு அலங்காரங்களும் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு பிரம்ம அலங்காரம் நடந்தது. இன்று மாலை, சிவபெருமான் அலங்காரம் நடைபெற உள்ளது. வரும், 5ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரமும், 6ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன், விழா நிறைவு பெறுகிறது.