உடுமலை: பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஒரு வாரமாக கந்தசஷ்டி விழா நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்றுமுன்தினம் சூரசம்ஹார விழா நடந்தது. இந்நிலையில் நேற்று, வள்ளி – தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு பக்தர்கள் புடைசூழ திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முருகனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உட்பட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டும், மலர்களால் அலங்கரிப்பட்டும், சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோன்று ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவிலிலுள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கும், முத்தையா பிள்ளை லே–அவுட் சக்திவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.