பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
வேலூர்: ஆம்பூர் அருகே, பழமையான சிவன் கோவிலில் இருந்த லிங்கம் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தென்னம்பட்டில், 2,000 ஆண்டு பழமையான அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் புதர் மண்டி வெளியே தெரியாமல் இருந்தது. இப்பகுதி மக்கள், கடந்த, 10 மாதத்திற்கு முன் கோவிலை சுத்தம் செய்தனர். அந்த கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், 16 கால் மண்டபம், அதிகார நந்தி இருந்தது. மேலும் பள்ளிகொண்டா, வேலூருக்கு செல்ல சுரங்கப் பாதை இருப்பதும் தெரியவந்தது. இந்த கோவிலுக்கு பூசாரி இல்லை. கோவில் கதவும் இல்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கோவிலுக்கு, அவ்வப்போது இப்பகுதி மக்கள் வந்து வழிபட்டுச் சென்றனர். இந்நிலையில், கடந்த, 20 நாட்களாக கோவில் கருவறையில் இருந்த மரகத லிங்கத்தை காணவில்லை. இந்த கோவிலுக்கு அருகில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பார்த்து சொல்லிய பிறகு தான், சிலை காணாமல் போனது இப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த இப்பகுதி மக்கள், கிராம நாட்டாண்மை முருகேசன் தலைமையில், ஆம்பூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதில், இந்த கோவில் கருவறையில் விலை மதிப்பில்லாத லிங்கத்தை, சிலை கடத்தல்காரர்கள் தான் கடத்திச் சென்று இருக்க முடியும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.