பதிவு செய்த நாள்
12
நவ
2016
11:11
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில்களிலும், டிச., 30க்குள், உண்டியல் பணத்தை எண்ணி, வங்கியில் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து, 590 கோவில்கள்; 56 திருமடங்கள்; 57 திருமடத்துடன் இணைந்த கோவில்கள்; 1,721 அறக்கட்டளைகள்; 17 சமணக் கோவில்கள் உள்ளன. கோவில்களில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல் நிரம்புவதற்கு ஏற்ப, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.தற்போது, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டு செல்லாது; அந்த நோட்டுகளை, டிச., 30க்குள் வங்கியில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் உண்டியல்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருக்கும். எனவே, அனைத்து கோவில்களிலும், உண்டியல்களை, டிச., 30க்குள் திறந்து, அதிலுள்ள பணத்தை எண்ணி, கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என, அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். - நமது நிருபர் -