பதிவு செய்த நாள்
14
நவ
2016
11:11
ஆத்தூர்: ஏத்தாப்பூர் முத்துமலை அடிவாரத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், 108 அடி உயர முருகன் சிலைக்கு, பாதம் அமைப்பதற்கான சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன். இவர், ஏத்தாப்பூர், முத்துமலை அடிவாரத்தில், 60 ஏக்கரில் வீட்டுமனை அமைத்துள்ளார். அங்கு, 15 அடி உயர பீடம் அமைத்து, 108 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நேற்று, முருகனுக்கு கால் பாதம் அமைத்து, சிமென்ட் கலவை கொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏத்தாப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வழிபாடு செய்தனர். திருவாரூரை சேர்ந்த, சிற்பி தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், 108 அடி உயரத்தில், முத்துமலை முருகன் சிலை கட்டப்பட உள்ளது. தற்போது, முருகன் கால் பாதம் உள்ளிட்ட கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. 250 டன் எஃகு கம்பி, 300 லிட்டர் தங்க கலவை கொண்டு கட்டப்படுகிறது. 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் தளம் அமைக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள முருகன் பாதத்தை, பக்தர்கள் தொட்டு வணங்க முடியும். சிலை கட்டுமான பணியில், ஒன்பது சிற்பிகள், கட்டட தொழிலாளர்கள், 20 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில், முருகன் சிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.