பதிவு செய்த நாள்
14
நவ
2016
11:11
வல்லக்கோட்டை : வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவில், வஜ்ர தீர்த்த குளத்தை சுற்றி மின் விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பரணி, கிருத்திகை, தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, தமிழ் வருடப் பிறப்பு போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை விசஷேமாக நடைபெறும். இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், மொட்டை போட்டு, கோவிலின் வஜ்ர தீர்த்த குளத்தில் நீராடி, சுப்ரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்நிலையில், இந்த கோவில் குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை அடுத்து, தனியார் தொழிற்சாலை நிர்வாகம், இந்த குளத்தை சீரமைத்து, சுற்றுச் சுவர் நடைபாதை அமைத்தது. ஆனால், இந்த குளத்தை ஒட்டி செல்லும் சாலைகள் ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருப்பதால், மின் விளக்குகள் பணியை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த குளக்கரை அருகே உள்ள சாலைகளிலும், குளக்கரையின் மேல் பகுதிகளிலும் மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குளக்கரை, இருட்டாக காட்சி அளிக்கிறது. இதனால், விசஷே நாட்களில் வரும் பக்தர்கள், குளத்தில் இறங்கும் போது தவறி விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.