பதிவு செய்த நாள்
15
நவ
2016
03:11
ஆர்.கே.பேட்டை: ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, மலைக்கோவிலில் வியாசேஸ்வரருக்கு, நேற்று காலை, பாலாபிஷேகமும், மாலையில் அன்னாபிஷேகமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐப்பசி பவுர்ணமி தினத்தில், சிவாலயங்களில் மூலவர் சிவலிங்கத்திற்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை பிரசாதமாக பெற பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். நேற்று, ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, வங்கனுார் மலைக்கோவிலில் வியாசேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் நடந்த அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு, 108 பால்குடம் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்காக, செவிண்டியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். பகல், 11:00 மணியளவில், மலைக்கோவிலுக்கு படி வழியாக நடந்து வந்த பக்தர்கள், மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். இதேபோல், பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரரேசனார் கோவில், கரிம்பேடு நாதாதீஸ்வரர், நாகபூண்டி நாகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.