மானாமதுரை கோயில் புதிய தேர் வெள்ளோட்ட முகூர்த்தக்கால் நடுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்படும் சோமநாதர் தேருக்கான வெள்ளோட்ட விழாவிற்காக முகூர்த்தக்கால் நடுதலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர்.
இதில் சோமநாதர் சுவாமி சென்ற தேர் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் 2 வருடங்களுக்கும் மேலாக புதிதாக தேர் செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.
இத்தேருக்கான பிரதிஷ்டை,வெள்ளோட்ட விழா, தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.விழா துவக்கமாக நேற்று காலை கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் விழாவிற்காக அபிஷேக,ஆராதனை,பூஜை செய்யப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து ஊன்றப் பட்டது.