பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் தயார் நிலையில் உள்ளது.
பல்லடத்தை அடுத்த செஞ்சேரிமலையில், மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க, பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவராக, மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிக்கிறார். ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவில், தென்சேரிமலை ஆதீன மடத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால், உடல் ரீதியான கோளாறுகள், நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு, ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள் பங்களிப்புடன், தங்கத்தேர் செய்யும் பணி கடந்த ஆண்டு ஏப்., மாதம் துவங்கியது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார், கீழச்சீவல்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி மற்றும் குழுவினர், செம்பு கவசம் மற்றும் தங்க முலாம் பூசும் வேலையையும், மாயமதம் சிற்ப கலைக்கூடத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் குழுவினர், மரவேலைப்பாடுகளையும் செய்தனர். தெய்வங்கள், சித்தர்கள், மற்றும் முனிவர்களின் சிற்பங்கள் என, அழகிய வேலைப்பாடுகளுடன், 12.4 அடி உயரத்தில் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டு வந்தது.
தேர் தயாரிக்கும் பணி முழுமையடைந்து, 8.8 கிலோ தங்கத்தால் முலாம் பூசப்பட்டது. இதன் முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதனையடுத்து, தைப்பூச விழாவை முன்னிட்டு நடக்கும் தேர்த்திருவிழாவில், தங்கத்தேரில், மந்திரகிரி வேலாயுத சுவாமி எழுந்தருள உள்ளார்.