பதிவு செய்த நாள்
17
நவ
2016
12:11
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கிய நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில், இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நியூஎல்லீஸ் நகர் ரோட்டில், 400 வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்த பார்க்கிங், பக்தர்களுக்கு குடிநீர், சமையல் கூடம், குறைந்த வாடகையில் தங்குமிடம், நவீன சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு தோறும் சபரிமலை சீசனை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, திருப்பரங்குன்றம் சாலை, எல்லீஸ்நகர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், கிரைம் பிராஞ்ச், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினர். வாகன கட்டண ஒப்பந்ததாரர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்தனர். மாநகராட்சி சார்பில் குடிநீர், தங்குமிடம், சுகாதார வளாக வசதிகள் செய்து தரவில்லை. போதாக்குறைக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோக்களில் கொள்ளை கட்டணம்
வசூலித்தனர். இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பக்தர்களுக்கு சிறப்பான வசதி: இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் நியூஎல்லீஸ்நகர் ரோட்டில் கோயிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில் இரண்டு கோடியே 50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் வாகன காப்பகம், சுற்றுச்சுவர் வசதியுடன் நிறுவப்பட்டது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் 12 பயோ டாய்லெட் வசதி. கோயில் சார்பில் ஆண்கள் 12, பெண்கள் 12 எண்ணிக்கையில் கழிப்பறைகள், குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன. 24 மணி நேர குடிநீர் வசதி. பக்தர்கள் சமையல் கூடம், வாகன காப்பகம் எதிரே கோயில் நிர்வாகம் சார்பில் குறைந்த வாடகையில் தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 மணி நேரம் வாகனங்களை நிறுத்த 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.