பதிவு செய்த நாள்
18
நவ
2016
12:11
ராமேஸ்வரம்,ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் அமைக்கப்பட்டுள்ள படிகட்டுகள் சேதமடைந்துள்ளதால் கடலில் இறங்கி புனித நீராட பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் வட, தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் இறங்கி புனித நீராடிய பின்னரே திதி கொடுப்பதும், கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பக்தர்கள் கடலுக்குள் இறங்கி நீராட வசதியாக வடமாநில டிரஸ்ட் குழுவினர் கடற்கரையில் 50 மீட்டர் துõரத்திற்கு படிகட்டுகள் அமைத்துள்ளனர். கடலில் படிகட்டு அமைப்பது இயற்கைக்கு மாறான நடவடிக்கை என, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த பாதுகாப்பு குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தும் படிகட்டுகள் அகற்றப்படவில்லை. மாறாக வடமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள், படிக்கட்டுகள் வழியாக கடலுக்குள் இறங்கி நீராடி வருகின்றனர். இந்நிலையில் படிக்கட்டுகள் பாசி படிந்தும், இடிந்தும் சேதமடைந்துள்ளது. தண்ணீருக்குள் மூழ்கியிருக்கு இடிந்த படிகட்டுகளில் பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் கால் வைக்கும் போது சறுக்கி விழுந்து காயமடைகின்ற பரிதாபம் அடிக்கடி நடக்கிறது.
மேலும் படிக்கட்டுகள் அருகே பக்தர்கள் விட்டுசெல்லும் துணிகள் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடும் நிலவுகிறது. ஆபத்தை உணர்ந்து இயற்கைக்கு மாறான படிகட்டுகளை அகற்ற திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணி செயலாளர் வக்கீல் ராமமூர்த்தி கூறுகையில்,“ இயற்கைக்கு மாறாக அக்னி தீர்த்த கடற்கரையில் அமைத்துள்ள படிக்கட்டுகளால், பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். இடையூறாக உள்ள படிக்கட்டுகளை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. தற்போது படிக்கட்டுகள் அருகே துணிகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. படிக்கட்டுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.