பதிவு செய்த நாள்
21
நவ
2016
12:11
திருவொற்றியூர்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தை, சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் பிரசித்தி பெற்றது. இத்திருத்தலம், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் உள்ளே, பிரம்ம தீர்த்த குளமும், வெளியே பிரம்மாண்ட ஆதிசேஷ திருக்குளமும் உள்ளன. கடந்த, 50 ஆண்டுகளில், ஓரிரு முறை மட்டுமே, ஆதிசேஷ குளத்தில், தெப்பம் விடப்பட்டிருப்பதாக, பக்தர்கள் நினைவுகூர்ந்தனர். அதற்கு, குளத்தை சரிவர பராமரிக்காதது தான் காரணம் என, பக்தர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். கடந்த, 2013ல், குளத்தில் தண்ணீர் தேங்க, 15 லட்சம் ரூபாய் செலவில், களிமண் நிரப்ப முடிவு செய்யப்பட்டது; நிதி ஒதுக்கி, மூன்று ஆண்டுகளாகியும், பணி கிடப்பில் உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையின் போது கூட, குளத்தில், பாதி அளவு தான் நீர் நிரம்பியிருந்தது. அதை பயன்படுத்தி, 10 ஆண்டுகளுக்கு பின், மாசி பிரம்மோற்சவத்தில், தெப்போற்சவம் நடைபெற்றது. கோவில் குளத்தை சுத்தப்படுத்தி, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, பழைய மாணவர் சங்கம் மற்றும் எதிர்பாராத ஆபத்திற்கு உதவுவோர் சங்கம் ஆகியவை இணைந்து, குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, இரு சங்கங்களைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர், படிக்கட்டுகளில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். மேலும், ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, குளத்தில் வளர்ந்திருந்த செடிகள், வேருடன் அகற்றப்பட்டன. இதனால், பக்தர்கள் மட்டுமின்றி திருவொற்றியூர்வாசிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து, வரும், 4ம் தேதி, உழவார பணிக்குழுவை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், குளம் முழுவதும் சுத்தம் செய்து, மண்ணை சமன்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.