பதிவு செய்த நாள்
24
நவ
2016
11:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, ஒரே மாதத்தில், 13.50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகளால், கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பணத்தை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். மேலும், வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு, சில்லரை தட்டுப்பாடு உள்ளது. இதனால், ’பெரிய கோவில் உண்டியல்களை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை திறந்து கணக்கிட்டு, உடனடியாக வங்கிகளில் செலுத்த வேண்டும்’ என, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சுவாமிமலை முருகன் கோவிலில், நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. அதில், 49 கிராம் தங்கமும், 866 கிராம் வெள்ளியும், 13.50 லட்சம் ரூபாயும் கிடைத்தன. இதில், செல்லாத ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன. இந்த கோவிலில், கடந்த மாதம் தான், உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது, ஆறு லட்சம் ரூபாய் வசூலாகி இருந்தது. தற்போது, இரு மடங்காக அதிகரித்துள்ளது. திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோவிலில், 10.42 லட்சமும், திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், 5.20 லட்சம் ரூபாயும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.