பதிவு செய்த நாள்
03
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை: கார்த்திகை தீப திருவிழாவிற்காக, அகல் விளக்குகள் தயாரிப்பதில், மண்பாண்ட கலைஞர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீப திருநாள் வரும், 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, 11ம் தேதி பரணி தீபமும் ஏற்றப்படும். பரணி தீபம் கோவில்களிலும், கார்த்திகை தீப திருவிழாவின் போது, வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக, புதிய அகல் விளக்குகள் விற்பனை வார சந்தைகளில் நடைபெறும்.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், சிங்கசமுத்திரம் (கொசமேடு), கோபாலபுரம், புதுார் மேடு உள்ளிட்ட பகுதியில், மண்பாண்ட கலைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள், பானைகள், மண் அடுப்புகள், சாலி கரகம் உள்ளிட்டவற்றுடன், விநாயகர் சிலைகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட வற்றையும் தயாரிக்கின்றனர்.
ஆவணி மாதத்தில், விநாயகர் சிலைகளை தயாரித்த இவர்கள், தற்போது கார்த்திகை தீப திருநாளை ஒட்டி, அகல் விளக்குகளை தயாரிப்பதில் முனைப்பு காட்டி உள்ளனர். அகல் விளக்கு தயாரிப்பதற்கான மண்ணை, பக்குவமாக குலைத்து, அச்சில் ஏற்றுகின்றனர். பின், தங்களின் நீண்ட கால அனுபவத்தால், அவற்றை, விளக்குகளாக வடிவமைக்கின்றனர். பச்சை மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை, சூளையில் வைத்து, சுட்ட விளக்காக, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தயார் செய்கின்றனர். பயன்பாட்டிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள், வார சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அகல் விளக்குகளின் அளவிற்கு ஏற்ப, ஒன்று முதல், மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பரவலாக, நான்கு அகல் விளக்கு, 10 ரூபாய் என விற்பனை செய்கிறோம். இன்று, சூளைக்கு கொண்டு செல்லப்படும் அகல்விளக்குகள், வரும் திங்கள் கிழமை முதல், சந்தைகளில் விற்பனை கொண்டு வரப்படும்.