பதிவு செய்த நாள்
03
டிச
2016
02:12
ஆர்.கே.பேட்டை: சுற்றியுள்ள மலைகளுக்கு மையமாக விளங்கும் காந்தகிரி மலைக்கோவிலின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காந்தகிரி மலைக்கோவில், ஆர்.கே.பேட்டையில் இருந்து விளக்கணாம்பூண்டி வழியாக, சந்திரவிலாசபுரம் செல்லும் சாலையில் உள்ளது. கிழக்கில், எஸ்.வி.ஜி.புரம் மலைத்தொடர், தெற்கில் சோளிங்கர் கொண்டபாளையம் பெரிய மலை, மேற்கில் காட்டூர் மலை, வடக்கில் பாலசமுத்திரம் மலை என, எல்லா திசைகளிலும் மலைகளை அரசனாக கொண்டு, அவற்றின் மையகர் காந்தகிரி மலை (கொங்காமுடி) அமைந்துள்ளது.
வட்ட வடிவில்: காந்தகிரி மலையில் இருந்து பார்த்தால், சுற்றிலும் வட்ட வடிவில் மலைகள் அமைந்திருப்பதை காணலாம். சிறப்பு மிக்க இந்த மலைக்கோவிலில், அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் குடிகொண்டுஉள்ளார். இங்கு, பிரதோஷம், பவுர்ணமி உற்சவம், திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, காணும் பொங்கல் தினத்தில் மலைச்சுற்று திருவிழாவும் நடந்து வந்துள்ளது. மலைக்கோவிலின் பின்புறம் பரந்து விரிந்த சமவெளியும், அதன் நடுவே ஆலமரமும் அமைந்துள்ளன. காணும் பொங்கலில் நண்பர்கள், உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், இந்த சமவெளியில், பொழுதை கழிப்பது உண்டு.
சிவாலயம்: மலை உச்சியில், பாறைகளுக்கு நடுவே சுரக்கும் நீரூற்று ஒன்றும் உள்ளது. நீரூற்று உள்ள இடத்தில் சிவாலயம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஏராளமான மரங்கள் இந்த மலையில் வளர்ந்துள்ளன. ஆந்திர மாநில காடுகளில் மட்டுமே காணப்படும் அரிதான கம்பளி பழம் மரங்களும் இங்கு உண்டு. அவற்றுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால், சிலர் வெட்டி பாழ்படுத்தி வருகின்றனர். மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டுமே கரடு முரடாக உள்ளன. இவற்றை சீரமைத்து, படி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.