தென்கரை: சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் பக்தர்கள் சரணம்கோஷம் முழங்க ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.
தென்கரை சபரிஐயப்பன்சுவாமி கோயிலில் கார்த்திகை உற்சவம் நவ.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பஞ்சமி திதி திருவோண நட்சத்திரத்தில் ஐயப்ப சுவாமி யானை மீது ஊர்வலமாக வைகை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார் ரவிசுப்பிரமணியம் தலைமையில் சுவாமிக்கு 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. வானத்தில் இரண்டு கருடன் வட்டமிட, வறண்ட வைகை ஆற்றில் பெரிய தொட்டியில் நிரப்பிய மஞ்சள் தண்ணீரில் பக்தர்கள் மலரை துாவி சரணம் கோஷமிட சுவாமிக்கு ஆராட்டுவிழா நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பின்னர் சுவாமி ரதவீதிகளில் எழுந்தருளி கோயிலில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஐயப்பபக்தர்கள் சேவா நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.