பதிவு செய்த நாள்
12
டிச
2016
11:12
திருப்பூர்: திருப்பூர் அருகே, 2,300 ஆண்டுகள் பழமையான அகல் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கார்த்திகை தீப வழிபாடு குறித்து, திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், திருப்பூர் மாவட்டத்தில், சமீபத்தில் மேற்பரப்பு ஆய்வு செய்தனர்.இதில், 2,300 ஆண்டுகள் பழமை யான, ஒரு முகம் மற்றும் நான்கு முகங்களுடன் கூடிய, அகல் விளக்கு கள், அவற்றின் தாங்கிகள் பல்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளன. இது குறித்து, வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:கொங்கு மண்டலத்தில், தீபத்துக்கு என சிறப்பு மிக்க வரலாறு உண்டு. புதிய கற்காலத்தில், கி.மு., 3,000 முதல், நீராதாரம் உள்ள பகுதிகளில், நிரந்தரமாக மக்கள் வசிப்பிடங்கள் உருவாக்கப்பட்டன.
பெருங்கற்படை காலமான, கி.மு., 1,000 முதல் கி.பி., 300 வரை, களிமண்ணால் வீட்டு உபயோக பொருட்கள் செய்துள்ளனர். இரவில் வெளிச்சம் உருவாக்க, களிமண்ணால் கை அளவுக்கு ஆழப் படுத்தி, அதில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்தி வந்துள்ளனர். பேரூர், கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு களில், அகல் விளக்குகள் பல கிடைத்தும், தமிழ் பிராமி எழுத்துக்களுடன் இருந்ததும் சான்றாகும். உடுமலை, சோமவாரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய மேற்பரப்பு ஆய்வுகளில், 2,300 ஆண்டுகள் வரை பழமையான அகல் விளக்குகளும், அதற்கான தாங்கிகளும் கிடைத்துள்ளன.பிற்கால, சோழர், பாண்டியர் கோவில்களுக்கு முன், பெரிய அளவிலான தீப கம்பங்களை அமைத்து உள்ளனர். அதில், விளக்கேற்றி கிராமம் முழுவதும் வெளிச்சம் பரவ செய்துள்ளனர். கொங்கு மண்டல கோவில்களில் இந்த அமைப்புள்ளது. பெரிய அளவிலான தீப கம்பம் பொங்கலுார் வட்டாரம், கண்டியன் கோவில் சின்னாரிபட்டியிலுள்ள கம்பத்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. இது, ஒரே கல்லில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விளக்கு ஏற்றும் மேற்பகுதி, தாமரை வடிவில் அமைந்துள்ளது. இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.