பதிவு செய்த நாள்
17
டிச
2016
11:12
சின்னமனுார்: அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் கோயில், 1, 100 ஆண்டுகள் பழமையானது. வடமொழியிலிருந்த இக்கோயில் தல வரலாறை, 300 ஆண்டுகளுக்கு முன் பூலாநந்தக்கவிராயர் செய்யுள் வடிவில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பூலாவனத்தில் சுயம்புவாய் தோன்றிய லிங்கத்தை தரிசிக்க வந்த திருமால் எழுப்பிய கோயில் என்ற ஐதீகம் கொண்டது. திருமாலின் விருப்பப்படி கோயிலின் எதிரே சிவனால் உருவாக்கப்பட்ட சிவகங்கை’ தாடகம் உள்ளது.
தல விருட்சமான முட்பூலாமரம்: அரிகேசரி நல்லுார் எனப் பெயர் பெற்ற சின்னமனுாரில், சுரபி நதியின் கீழ்புறம் சுயம்புவாக முளைத்த லிங்கம் உள்ளது. இதன் இட பாகத்தில், சிவனின் திருவிளையாடலால் தேவலோக கற்பகத் தரு முட் பூலாமரமாக முளைத்தது. அப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜசிங்கனுக்கு ஆயன் பால் கொண்டு செல்லும் போது, இந்த முட் பூலாமரத்தின் வேர் தடுக்கி கீழே விழுந்ததில் பால் கொட்டியது. தொடர்ந்து இதே போன்று நடந்ததால் ஆவேசமடைந்த ஆயன், மரத்தின் வேரை வெட்டினான். அந்த வெட்டு சிவலிங்கத்தில் பட்டு குருதி பெருகியது. அப்போது ஜோதி வடிவாய் தோன்றிய இறைவன் பூலா மரத்தை, கற்பக தருவாக்கி சாபம் நீக்கினார். தான் விட்டு வந்த சல்லி வேரிலிருந்து முளைக்கும் முட்பூலாமரத்தை, கற்பகத் தருவாக நினைத்து யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்க வேண்டுமென்று இறையிடம் வேண்டியது மரம், என்று தலபுராண செய்யுளில் உள்ளது. அன்றிலிருந்து தல விருட்சமாக மூலவருக்கு இட பக்கம் உள்ள முட் பூலாமரம் உள்ளது. மாங்கல்ய பாக்கியம், குழந்தை பேறு போன்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதால் பக்தர்கள் தங்கள் குறைகளை தல விருட்சமான பூலாமரத்திடம் இறக்கி வைக்கின்றனர். மேலும் விபரம் அறிய: 98420 87368.