பதிவு செய்த நாள்
10
அக்
2011
04:10
1908-இல் நான் எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலில், இந்தியாவில் வளர்ந்து கொண்டு வரும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து, கைத்தறி அல்லது கைராட்டினமே என்று எழுதினேன். அந்தச் சமயம் வரையில் கைத்தறியையோ ராட்டினத்தையோ நான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. இந்திய மக்களை வாட்டி வரும் வறுமையைப் போக்குவதற்கு உதவியாக இருக்கும் எக்காரியமும் அதே சமயத்தில் சுயராஜ்யம் ஏற்படும்படி செய்யும் என்ற கருத்தை வைத்துக்கொண்டு அப்புத்தகத்தில் இப்படி எழுதினேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-இல் நான் இந்தியாவுக்குத் திரும்பிய போதும்கூட கைராட்டினத்தை நான் நேராகப் பார்த்ததில்லை. சபர்மதியில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்தபோது அங்கே சில கைத்தறிகளை வைத்தோம். அவற்றை அமைத்தவுடனே ஒரு பெரிய கஷ்டமும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆசிரமத்திலிருந்த நாங்கள் எல்லோரும் உத்தியோகம், வியாபாரம் முதலியவைகளில் ஈடுபட்டிருந்தவர்களே அன்றி எங்களில் யாரும் கைத்தொழில் தெரிந்தவர்கள் அல்ல.
தறிகளில் நாங்கள் வேலை செய்வதற்கு முன்னால் நெசவு வேலையை எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை. ஆனால், திகைத்துப் போய் எடுத்த காரியத்தை இலகுவில் விட்டு விடுகிறவரல்ல மகன்லால் காந்தி. இயந்திர விஷயங்களில் இயற்கையாகவே அவருக்கு ஆற்றல் இருந்ததால், சீக்கிரத்திலேயே அக்கலையில் அவர் முற்றும் தேர்ச்சி பெற்று விட்டார். ஒருவர் பின் ஒருவராகக் கைத்தறியில் நெய்பவர்கள் பலரை ஆசிரமத்தில் புதிதாகப் பழக்கி விட்டோம். எங்கள் கையால் நாங்களே நெய்துகொண்ட துணிகளைத் தான் நாங்கள் உடுத்த வேண்டும் என்பதே நாங்கள் கொண்ட லட்சியம். மில் துணியைப் போட்டுக் கொள்ளுவதை உடனே விட்டுவிட்டோம். இந்தியாவில் தயாரான நூலைக் கொண்டு கையினால் நெய்த துணிகளை மாத்திரமே அணிவது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தீர்மானித்துக் கொண்டோம். இப்பழக்கத்தை மேற்கொண்டதால் எங்களுக்கு எவ்வளவோ அனுபவங்கள் ஏற்பட்டன. நெசவாளர்களின் வாழ்க்கை நிலையையும், எந்த அளவுக்கு அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் அறிந்தோம்.
தங்களுக்கு வேண்டிய நூல் கிடைப்பதில் அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்கள், எந்தவிதமாகப் பலவிதமான மோசடிகளுக்கும் அவர்கள் இரையாகின்றனர் என்பது, கடைசியாக, அவர்களுக்குச் சதா வளர்ந்து கொண்டே போகும் கடன் நிலைமை ஆகியவைகளையும், அவர்களுடன் நேரடியான தொடர்பு கொண்டதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம். எங்களுடைய தேவைக்குப் போதுமான துணி முழுவதையும் உடனே நாங்களே தயாரித்துக் கொண்டுவிடும் நிலையில் நாங்கள் இல்லை. ஆகையால், கைத்தறி நெசவாளர்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொள்ளுவதே நாங்கள் அடுத்தபடியாகச் செய்ய முடிந்தது. இந்திய மில் நூலைக் கொண்டு கைத்தறியில் தயாரான துணிகள், ஜவுளி வியாபாரிகளிடம் இருந்தோ, கைத்தறிக்காரர்களிடம் இருந்தோ சுலபமாகக் கிடைக்கவில்லை. இந்திய மில்கள் நயமான உயர்ந்த ரக நூல்களைத் தயாரிக்காததால், உயர்ந்த ரகத் துணிகளையெல்லாம் வெளிநாட்டு நூலைக் கொண்டே நெய்து வந்தார்கள். இன்றுகூட, உயர்ந்த ரக நூலை இந்திய ஆலைகள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கின்றன.
மிக உயர்ந்த ரக நூலை அவர்கள் தயாரிக்கவே முடியாது. எங்களுக்காகச் சுதேசி நூலை நெய்வதற்கு ஒப்புக் கொள்ளும் நெசவாளரை அதிகச் சிரமத்தின் போரிலேயே நாங்கள் தேடிப் பிடிக்க முடிந்தது. அவர்கள் நெய்யும் துணி முழுவதையும் ஆசிரமம் வாங்கிக் கொண்டு விடுவது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் இசைந்தார்கள். இவ்வாறு நம் ஆலைகளில் தயாரிக்கும் நூலைக் கொண்டு நெய்த துணிகளை மாத்திரமே நாங்கள் உடுத்துவது என்று தீர்மானித்து, நண்பர்களிடையே இதை நாங்கள் பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்திய நூல் ஆலைகளுக்காக வலிய வேலை செய்யும் ஏஜெண்டுகளாக நாங்கள் ஆனோம். இதனால், எங்களுக்கு ஆலைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்களுடைய நிர்வாகத்தைப் பற்றிய சில விஷயங்களையும், அவர்களுக்கு இருந்த கஷ்டங்களையும் நாங்கள் அறிய முடிந்தது. தாங்கள் நூற்கும் நூலைக் கொண்டு தாங்களே நெய்து விடவும் வேண்டும் என்பதே ஆலைகளின் நோக்கம் என்பதைக் கண்டோம். கைத்தறி நெசவாளர்களிடம் அவர்களுக்கு இருந்த ஒத்துழைப்பு, விரும்பி அளிக்கும் ஒத்துழைப்பல்ல என்பதையும் தவிர்க்க முடியாத நிலையில், தாற்காலிகமாக அளிப்பதே என்பதையும் கண்டோம். இந்த நிலையில் எங்களுக்கு வேண்டிய நூலை நாங்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டோம். இதை நாங்களே செய்து கொண்டு விட்டாலன்றி, ஆலைகளை நம்பி இருப்பது என்பது இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. நூல் நூற்கும் இந்திய ஆலைகளின் தரகர்களாகத் தொடர்ந்து இருந்து கொண்டு வருவதால், நாட்டிற்கு எந்தச் சேவையையும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்தோம்.
நாங்கள் சமாளித்து ஆக வேண்டியிருந்த கஷ்டங்களுக்கு முடிவே இல்லை. எப்படி நூற்பது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ளுவதற்குக் கைராட்டினமோ, நூற்பவரோ கிடைக்கவே இல்லை. ஆசிரமத்தில் நெய்வதற்கான நூலைக் கண்டுகள் ஆக்குவதற்கு ஒருவகை ராட்டினத்தை உபயோகித்து வந்தோம். ஆனால், இதையே நூற்கும் ராட்டையாகவும் உபயோகிக்கலாம் என்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் காளிதாஸ் ஜவேரி ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். நூற்பது எப்படி என்பதை அப்பெண் எங்களுக்குக் காட்டுவார் என்றும் சொன்னார். உடனே ஆசிரமவாசி ஒருவரை அந்தப் பெண்ணிடம் அனுப்பினோம். இவர், புதிய விஷயங்களை வெகு எளிதில் கற்றுக் கொண்டுவிடும் ஆற்றல் படைத்தவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், இவரும் அக்கலையின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே திரும்பி வந்து விட்டார். இவ்விதம் காலம் போய்க்கொண்டே இருந்தது. நாளாக ஆக நானும் பொறுமையை இழந்து வந்தேன். கையினால் நூற்பதைக் குறித்து ஏதாவது தகவலை அறிந்திருக்கக் கூடியவர்களாக ஆசிரமத்திற்கு வருவோர் போவோர்களிடம் எல்லாம் அதை குறித்து விசாரித்துக் கொண்டு வந்தேன். இக்கலை பெண்களிடம் மாத்திரமே இருந்து வந்தாலும், அது அநேகமாய் அழிந்து போய்விட்டதாலும், ஒருவருக்கும் தெரியாத மூலை முடுக்குகளில் நூற்பவர்கள் யாராவது சிலர் இருப்பார்கள். அப்படி இருந்தாலும், அப்படிப்பட்டவர்கள் இன்னாரென்பதைப் பெண்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும்.
புரோச் கல்வி மகாநாட்டில் தலைமை வகிப்பதற்காக 1917-இல் என்னுடைய குஜராத்தி நண்பர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்றனர். அங்கேதான் கங்காபென் மஜ்முதார் என்னும் அற்புதமான பெண்மணியைக் கண்டுபிடித்தேன். அவர் விதந்து என்றாலும் அவருக்கு எல்லையற்ற ஊக்கமும் முயற்சியும் உண்டு. படிப்பு என்ற வகையில் பார்த்தால் அவர் அதிகம் படித்தவர் அல்ல. ஆனால், தீரத்திலும் பொது அறிவிலும் நமது படித்த பெண்களை அவர் எளிதில் மிஞ்சிவிடக் கூடியவர். தீண்டாமைக் கொடுமையை அவர் முன்னாலேயே விட்டொழித்திருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவர் தாராளமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய்து வந்தார். அவருக்குச் சொந்தத்தில் சொத்து உண்டு. அவருடைய தேவைகளோ மிகச் சொற்பம். நல்ல திடகாத்திரமான உடல் உள்ளவராகையால் எங்கும் துணையில்லாமலேயே போய் வருவார். சர்வ சாதாரணமாகக் குதிரைச் சவாரி செய்வார். கோத்ரா மகாநாட்டில் அவரைக் குறித்து இன்னும் நெருக்கமாக அறியலானேன். ராட்டினம் கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருந்த துயரை அவரிடம் முறையிட்டுக் கொண்டேன். ஊக்கத்துடன் விடாமல் தேடி ராட்டினத்தைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்களித்து, என் மனத்திலிருந்த பளுவை அவர் குறைத்தார்.