பதிவு செய்த நாள்
17
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை: மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு நித்ய பூஜை துவங்கியது. திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். அதிகாலை சிறப்பு பூஜை, மற்றும் சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன், மார்கழி மாதம் நேற்று துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் உற்சவம் துவங்கியது. 5:00 மணிக்கு, பெருமாள் சிறப்பு தரிசனம் நடந்தது. வங்கனுார், சிங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி முதல் சனிக்கிழமையை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை தரிசனம் நடைபெறும். வரும் தை 1ம் தேதி அதிகாலை, 3:00 மணி முதல், காலை, 11:00 மணி வரை சிறப்பு உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதே போல், மேல்பொதட்டூர் பூவராகசுவாமி கோவில், பள்ளிப்பட்டு வரதநாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று மார்கழி உற்சவம் துவங்கியது.