பதிவு செய்த நாள்
20
டிச
2016
12:12
ஆர்.கே.பேட்டை: வீடுகளில் அடைந்து கிடந்த பழைய உலோக பாத்திரங்கள், சில நிமிடங்களில், கடவுள் சிலைகளாக பிரசன்னமானதை காண, பகுதிவாசிகள் ஆர்வத்துடன் குவிந்தனர். தங்களின் இஷ்ட தெய்வத்தை வடிவமைத்து கொடுக்கும் கலைஞரை, வியப்புடன் உற்று நோக்கினர். பரம்பரையாக வந்த பாத்திரங்களை, புதிய பாத்திரங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்ய, பகுதிவாசிகள் விரும்புவது இல்லை. அவற்றை ஞாபக சின்னங்களாக போற்றி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், அவற்றை உருமாற்றி, தங்களின் இஷ்ட தெய்வத்தின் சிலையாக பூஜை அறைகளில் வைத்து வழிபட, ஸ்ரீகாளிகாபுரம் பகுதி வாசிகளுக்கு நேற்று வாய்ப்பு கிடைத்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, கலைஞர்கள் சிலர், உலோக பாத்திரங்களை உருக்கி, அந்த கலவையில், சுவாமி சிலைகளை அச்சில் வார்த்து உருவாக்குகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் தெருக்களில் வலம் வந்த அவர்களிடம், பகுதிவாசி கள், தங்கள் வீட்டில் முடங்கிக் கிடந்த பழைய பாத்திரங்களை கொடுத்து, புதிய சுவாமி சிலைகளை உருவாக்கி எடுத்துச் சென்றனர். தெருக்களில், பகுதிவாசிகளின் நேரடி கண்காணிப்பில், அலுமினியம், பித்தளை உள்ளிட்ட உலோக பாத்திரங்களை உருக்கி, சுவாமி சிலைகளை அச்சில் வார்த்தெடுத்தனர். சில நிமிட நேரத்தில், தங்களின் பாத்திரங்கள், சுவாமி சிலைகளாக அவதாரம் எடுத்ததை கண்டு பகுதிவாசிகள் ஆச்சரியம் அடைந்தனர். பரணில் முடங்கி கிடந்த பரம்பரை பாத்திரங்களை, உருமாற்றி, பூஜை அறைக்கு வழிபாட்டிற்கு கொண்டு வந்ததில், அவர்களுக்கு அளவில்லாத சந்தோஷம்.