மடப்புரம் உதவி ஆணையர் மாற்றம் கோயில் நிர்வாக பணிகள் முடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2016 12:12
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் ரோசாலின் சுமதா மாற்றப்பட்ட பின்னரும் பொறுப்பை ஒப்படைக்காததால் கோயில் நிர்வாகம் முடங்கியுள்ளது. மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரோசாலின் சமதா சேலத்திற்கு கடந்த மாதம் 23 ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக இளையராஜா என்பவர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். ரோசாலின் சமதா மாற்றப்பட்ட நிலையிலும்,மருத்துவ விடுப்பு கொடுத்து விட்டு பொறுப்பை ஒப்படைக்காமல் உதவி ஆணையர் அறையை பூட்டிவிட்டு,வாகன சாவியையும் கொண்டு சென்று விட்டார். கணக்கர் ஜெயமாரியும் தனது அறையை பூட்டிவிட்டு விடுப்பில் சென்று விட்டார். முக்கிய பொறுப்பில் உள்ள இருவரும் விடுப்பில் சென்றதுடன் பொறுப்பை ஒப்படைக்காததால் மடப்புரம் கோயில் நிர்வாகப் பணி முற்றிலும் முடங்கிவிட்டது.
கோயில் வளாகத்தில் சாமி படங்கள், அர்ச்சனை சீட்டு உள்ளிட்டவை கணக்காளரின் அறையில் இருக்கும். விற்பனைக்கு ஏற்றவாறு அவற்றை சரிபார்த்து கொடுப்பது கணக்காளரின் பணி. அவரும் அறையை பூட்டிவிட்டு சென்றதால் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. அர்ச்சனை,கனி சீட்டு,புடவை சார்த்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் கோயில் சார்பில் தற்காலிக சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உதவி ஆணையர் இளையராஜா கூறுகையில்; துறை உத்தரவின் பேரில் மடப்புரத்திற்கு வந்து பதவியேற்று விட்டேன். அறை சாவி கொடுக்காதது, பொறுப்பு ஒப்படைக்காதது குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன்,என்றார். இதனிடையே திருக்கோயில் நிதியில் முறைகேடு செய்ததாகவும், முறையாக மருத்துவ விடுப்பு எடுக்காதது உள்ளிட்ட காரணங்களை கூறி அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் கணக்காளர் ஜெயமாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.