பதிவு செய்த நாள்
24
டிச
2016
11:12
சின்னமனுார்: குச்சனுாரில் சுரபி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. சனீஸ்வரர் சைவ பிரியர், அவர் சன்னதி வளாகத்தில் உள்ள பரிவார தெய்வமான சோணை கருப்பசாமிக்கு, ஆண்டுக்கு ஒரு முறை மதுவுடன் கூடிய கறி விருந்து வழங்கப்படுகிறது. சனி தோஷ நிவர்த்தி தலமான இங்குள்ள சோணை கருப்பசாமி பக்தர்களை பிரச்னைகளில் இருந்து காக்கும் தெய்வம் என்பது இப்பகுதியினரின் அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழகம், இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் மது காணிக்கை வழங்க பக்தர்கள் வருவர். கடந்த ஆகஸ்டில் நடந்த திருவிழாவின் போது 1,500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வழங்கினர்.
சனீஸ்வரர் கோயில் உதவி அர்ச்சகர் ப.சிவக்குமார் கூறியதாவது: மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் சிலவற்றை அவர்களே தீர்த்துக்கொள்ள முடியும். தீராத பிரச்னைகளுக்கு தெய்வமே தீர்வு என்பது ஆன்மிக சித்தாந்தம். இங்குள்ள சோணை கருப்பசாமியிடம் தீர்க்க முடியாத துன்பங்களுக்கு நிவர்த்தி வேண்டி பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறும் போது மது பாட்டில்கள், ஆடு, கோழி உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடனாக வழங்குகின்றனர். ஆடி சனிவார திருவிழா நேரத்தில், நான்காவது சனிவாரம் முடிந்த பின் வரும் திங்களன்று இரவு பக்தர்கள் வழங்கிய மதுபாட்டில்கள் சுவாமிக்கு படையல் வைக்கப்படும். ஆயிரக்கணக்கில் உள்ள மதுபாட்டில்களை சுவாமி முன் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கருவறையை பூட்டி பாட்டிலில் உள்ள மதுவை சுவாமி சிலைக்கு இடதுபுறமுள்ள சிறு துவாரத்தில் ஊற்றுகின்றனர். அந்த நேரத்தில் மதுவாடை துளி அளவு கூட வராது. ஒருபடி(1.5லி.,) கொள்ளளவு உள்ள மண் கலயம் எவ்வளவு மது ஊற்றினாலும் நிறையாது,”என்றார். மேலும் விபரங்களுக்கு 97892 14935