பதிவு செய்த நாள்
27
டிச
2016
05:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக வருகையால், தனியார் லாட்ஜில் இரு மடங்கு கூடுதலாக வாடகை வசூலிக்கின்றனர். தமிழக பள்ளியில் 2ம் பருவ இறுதி தேர்வு முடிந்து டிச.,25 முதல் ஜன.,2 வரை விடுமுறை அறிவித்தனர். இந்த விடுமுறையை பலர் கோயில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். இதில் டிச., 25 தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், வட மாநில பக்தர்கள் 5 ஆயிரம் பேர் ராமேஸ்வரத்தில் மகாபாரதம், ராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துவதால், கோயில் ரதவீதி, பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
லாட்ஜ் ஹவுஸ் புல் : வழக்கத்தை விட இந்தாண்டில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், இங்குள்ள 100க்கு மேலான தனியார் லாட்ஜ், விடுதியாக மாறிய வீடுகளில் அறைகள் ஹவுஸ் புல் ஆனது. பெரும்பாலான லாட்ஜில், இரவில் வரும் பக்தர்கள் தேவையை கருதி, ஒரு டபுள் பெட் அறைக்கு வழக்கத்தை விட 2 மடங்கு கூடுதலாக வாடகை (ரூபாய் 1200 பதிலாக 2500) வசூலிக்கின்றனர். இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அறைக்கு கூடுதல் வாடகையில் தங்கி செல்லும் அவலம் உள்ளது. பொதுவாக ராமேஸ்வரத்தில் அமாவாசை, சனி, ஞாயிறு நாள்களில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்திக்கு அறைகளுக்கு கூடுதல் வாடகை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.