பதிவு செய்த நாள்
12
அக்
2011
11:10
திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களின் மதிப்பீடு பணிகள், எப்போது துவங்குவது என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, வரும் 15ம் தேதி கூடி முடிவெடுக்கும். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உலக பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோவில், பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, இப்பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் மத்திய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையில், ஐவர் குழுவை நியமித்துள்ளது. இக்குழு, கோவிலில் பொக்கிஷ மதிப்பீடு செய்வதற்கு முன்னால், செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை சுப்ரீம் கோர்ட் விசாரித்து, அவ்வறிக்கையின்படி செயல்பட, அக்குழுவுக்கு அனுமதி வழங்கியது. மேலும், கோவிலில் இதுவரை திறக்கப்படாத பி அறையை சுப்ரீம் கோர்ட்டின் மறுஉத்தரவு வரும் வரையில், திறக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நியமித்த குழுவுக்கு அனுமதி கிடைத்த பின், முதல் முறையாக திருவனந்தபுரத்தில், வரும் 15ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இக்கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுகள் குறித்தும், பொக்கிஷங்களை எப்போது மதிப்பீடு செய்ய துவங்குவது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. மதிப்பீடு பணிகள் துவங்குவதற்கு முன்பாக, கோவிலில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து, கூட்டத்தில் கெல்ட்ரான் நிறுவன பிரதிநிதிகளிடம் ஆலோசிக்கப்படும். அப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான், பாதாள அறைகள் திறப்பது குறித்து, முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.