சபரிமலை: சபரிமலையில் மயில் இறகுகளால் ஆன விசிறி வீசி பக்தர்களின் களைப்பு போக்கி வருகிறார் மதுரை பக்தர்.பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான ஏற்றம் கடந்து பல மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பகலில் வரிசையில் நிற்கும் பக்தர்கள் வெப்பத்தால் சிரமப்படுகின்றனர். இந்த பக்தர்களுக்கு உதவ மயில் இறகுகளால் ஆன விசிறியால் வீசி சேவை செய்து வருகிறார் மதுரை பக்தர்.மதுரை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். கடந்த 21 ஆண்டுகளாக சபரிமலை வரும் இவர் பக்தர்கள் படும் சிரமத்தை பார்த்து இந்த ஆண்டு மயில் இறகுகளால் ஆன பெரிய விசிறியுடன் வந்தார். சிறு குழந்தைகளும்,முதியவர்களும் வெப்பத்தால் சிரமப்படும் போது அவர்கள் அருகில் சென்று விசிறியால் வீசிக் கொடுக்கிறார். இது பக்தர்களுக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவ்வாறு பக்தர்களுக்கு வீசி கொடுக்கும் இவர், முதன் முறையாக சபரிமலையில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளார். புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்கள் கற்பூர தீபம் ஏந்தி மரக்கூட்டம் வரை சென்று பக்தர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். 18-ம் படிக்கு கீழ் பகுதியில் 2017-ஐ வரவேற்கும் வகையில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.