பதிவு செய்த நாள்
02
ஜன
2017
11:01
பழநி:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பழநி மலைக்கோவிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் நடை, புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், முறையற்ற நிலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
திருச்செந்துாரில்.. .திருச்செந்துார் முருகன் கோவிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 7:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பல பகுதிகளில் இருந்து, நடை பயணமாக திருச்செந்துார் வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 3:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. பொங்கல் பண்டிகையான ஜன., 14 வரை, தினசரி கோவில் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
சிறப்பு அபிஷேகம்: திருவண்ணாமலை, அருணாச் சலேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கோவில் தங்க கொடி மரம் அருகில் உள்ள சம்பந்த விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து, அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. உற்சவருக்கு வெள்ளி அங்கி, மூலவருக்கு தங்க நாகாபரணம் சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனத்திற்கு வந்ததால், கோவிலில் கூட்டம் அலை மோதியது. ஒரு மணி நேரம், நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.