பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
ஊட்டி: ஊட்டி கோக்கால் கிராமத்தில், துவங்கிய கோத்தர் இனமக்களின் ’அய்னோர், அம்னோர்’ குலதெய்வ பண்டிகையை முன்னிட்டு, புதுபானை செய்ய, மண்ணை எடுத்து வரும் பணியில் பழங்குடியின பெண்கள் ஈடுபட்டனர். ஊட்டி அருகே கோக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கோத்தர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வமான ’அய்னோர் அம்னோர்’ பண்டிகை துவங்கியது. இதன் ஒரு பகுதியாக, கிராம பெண்கள், அவர்களின் குல தெய்வ நிலத்தில் இருந்து, களி மண்ணை எடுத்து வந்தனர். இனிவரும் நாட்களில், பானை செய்யும் பணிகள் துவக்கப்படும். இந்த பணிகள் முடிந்தவுடன், குல தெய்வ கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்படும். பின்பு, சாமை என்ற தானியத்தில் பொங்கல் செய்து, புதிய மண் பானையில், குல தெய்வத்திற்கு படையல் வைக்கப்படும். பண்டிகையின் நிறைவு நாளில், சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், ஆண்கள் தொடர்ந்து பெண்களும் பாரம்பரிய நடனம் ஆடுவர். இதில், சிறப்பம்சமாக, ஆண்கள் ’ஆட்குபஸ்’ என்ற உடையை அணிந்து நடனமாடுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ’உணவும், விவசாயமும் நம் வாழ்வின் முக்கிய அங்கம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், பழங்குடி மக்கள் கொண்டாடும் இப்பண்டிகையை காண, வரும் நாட்களில், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வர உள்ளனர்.