பதிவு செய்த நாள்
04
ஜன
2017
12:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிபேட்டை பெருமாள் கோவில் வாகன மண்டபம் பழுதால், மழைநீர் கசிந்து, மரத்தாலான பெருமாள் வாகனங்கள், பூசனம் பிடித்து சேதமடைந்துள்ளன. காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், இக்கோயில் பராமரிக்கப்படுகிறது. கோவிலில், கோபுர பணிகள் நடந்து வருவதால், வாகன புறப்பாடு, எட்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. சர்பம், யாழி, சிங்கம், கருடர், மயில், அன்னம், பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல வாகனங்கள், கோவிலின் இடப்பக்கம் உள்ள, வாகன மண்டபத்தில் உள்ளது. இந்த வாகன மண்டபம், ஓடு கட்டடமாக இருக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஓடுகள் ஆங்காங்கே பெயர்ந்து விட்டன. விரிசல், உடைந்த ஓடுகளின் இடுக்களில், மழைநீர் கசிகிறது. இதனால், மரத்தால் செய்யப்பட்ட, பெருமாள் உலா வாகனங்கள், சேதமடைந்து வருகின்றன. இனி, அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வாகன மண்டபத்திற்குள், ஐம்பொன் மூலாம் பூசப்பட்ட, சிலைகள் இருக்கின்றன. அவை, திருடு போக, அதிக வாய்ப்புள்ளது. அதிகாரிகள், கோயில் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.