பதிவு செய்த நாள்
09
ஜன
2017
01:01
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதாசி உற்சவம் நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு, மார்கழி மாத வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில், தேவியருடன், மகாமண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத பாராயணங்கள் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவைகளுடன், காலை, 5:20 மணிக்கு, சொர்க்கவாசல் வழியே கடந்து, 6:00 மணிக்கு, வீதியுலா சென்றார். மீண்டும் கோவிலை அடைந்து, பள்ளியறையில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 11:30 மணிக்கு, உச்சிக்கால வழிபாடு நடைபெற்றது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள்; மெய்யூர், கூவத்துார் ஆகிய பகுதி ஆதிகேசவ பெருமாள் கோவில்களிலும், அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஏகாதசி உற்சவம் நடந்தது.
வெங்கடேச பெருமாள் கோவிலில் 97ம் ஆண்டு உற்சவ விழா
உத்திரமேரூர் : திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 97ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றங்கரை மீது, அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழா மற்றும் சொர்க்க வாசல் தரிசனம் நடப்பது வழக்கம். அதன் படி, 97ம் ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை சொர்க்க வாசற்படி தரிசனமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை கோபுர வாயிலில், மலரால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, மேள தாளத்துடன் திருமுக்கூடல் பகுதியில் வீதி உலா வந்த அப்பன் வெங்கடேச பெருமானை பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இவ்விழாவில், திருமுக்கூடல் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.