சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2011 11:10
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 30 மாதங்களில் கோவில் மூலம் அரசுக்கு வருவாய் ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உண்டியல்கள் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்படுகிறது. 15வது முறையாக நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. நேற்று இதுவரை இல்லாத அளவில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 279 ரூபாய் முதல் முறையாக 60 கிராம் தங்கம், 77 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1,100 அமெரிக்க டாலர், 311 மலேசியா ரிங், 20 சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணம் இருந்தது.இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சிதம்பரம் கிளை சீனியர் மேலாளர் சத்தியநாராயணன் தலைமையில் மூன்று ஊழியர்கள் பணத்தை சரிபார்த்து வங்கிக்கு எடுத்துச் சென்றனர்.கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 30 மாதங்களில் இதுவரை 15 முறை உண்டியல் திறக்கப்பட்டுள்ள நிலையில் நடராஜர் கோவில் உண்டியல் மூலம் அரசுக்கு இதுவரை 65 லட்சத்து 68 ஆயிரத்து 131 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.மேலும் பிரசாத கடை ஏலம் மற்றும் பக்தர்கள் நேரிடையாக காணிக்கை செலுத்தியது என மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நடராஜர் கோவில் மூலம் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.