பதிவு செய்த நாள்
13
ஜன
2017
12:01
கோபி: பாரியூர், கொண்டத்து காளியம்மன் கோவிலில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கினர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 29ல் துவங்கியது. அன்று முதல் பூ மிதிக்கும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்க துங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் நேற்று அதிகாலை நடந்தது. அம்மன் சன்னதி எதிரே, 60 அடி
நீள குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. பூ மிதிக்கும் நிகழ்ச்சி துவக்கமாக, காலை, 6:15 மணிக்கு பாரியூர் அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து, 6:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி கந்தவேல், ஆகம விதிப்படி குண்டத்து முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும்
பூக்களை அள்ளி வீசினார். அதை பக்தர்கள் லாவகமாக பிடித்தனர்.
அதற்குபின் தகித்த நெருப்பு கங்குகளை, கைகளால் அள்ளி வீசி, குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரையடுத்து, வீரமக்கள், முக்கிய பிரமுகர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் தீ மிதிக்க தொடங்கினர். காலை, 11:00 மணிவரை தொடர்ந்த நிகழ்ச்சியில், 30
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முதல் முறையாக ஷவர்: தீ மிதிக்கும் பக்தர்கள், ஈரத்துணியுடன் குண்டம் இறங்குவர். வழக்கமாக, கோவிலை ஒட்டி செல்லும், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அதில் புனித நீராடி, குண்டம் இறங்குவர். நடப்பாண்டில் மழை பொய்த்ததால், வாய்க்காலில் தண்ணீர்
செல்லவில்லை. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில், ஷவர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் நீராடிய பின் குண்டம் இறங்கினர். பூ மிதிக்கும் பக்தர்கள், பாரியூர் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவில் துவங்கி, திருகினிபாலம், பெருமாள்கோவில் வரை, 1 கி.மீ., தூரத்துக்கு கடும் குளிரை பொருட்படுத்தாமல், நள்ளிரவு முதல் வரிசையாக நின்றனர்.