காணும் பொங்கல் : சென்னையில் 15,000 போலீசார் குவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 11:01
சென்னை : காணும் பொங்கல் இன்று (ஜனவரி 16) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாதலங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. சாதாரண உடையில் மக்களோடு மக்களாக ஆண் மற்றும் பெண் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், திருட்டு மற்றும் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவான்மியூர், பெசன்ட்நகர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு வேலிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.