பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மாட வீதிகளில் கட்டடக்கலை மாணவர்கள் ஆராய்ச்சியை துவக்கியுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்கதும், கட்டடக் கலைக்கும் எடுத்துகாட்டாகவும் உள்ளது உத்தரகோச மங்கை மங்களநாதர் கோயில். இங்குள்ள சிற்பங்கள், பழமையான கட்டடங்கள், மாடவீதிகள், தெருக்கள், குளம், பழமையான வீடுகளின் அமைப்பு குறித்து சென்னை ஆலிம் முகம்மது அகாடமி ஆர்க்கிடெக்சர் கல்லுாரியை சேர்ந்த 40 மாணவர்கள் தங்கி ஆராய்ச்சியை துவக்கியுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் இந்துமதி, கரண், தாலிப் அகமது ஆகியோர் கூறுகையில்,“ஆர்க்கிடெக்சர் எனும் கட்டடக்கலை குறித்த 5 ஆண்டுகள் படிப்பில், 2 ம் வருட மாணவர்களுக்கு பழமையான நகரமைப்பு, கோயில் சிற்பங்கள், கலை நுணுக்கங்கள், வேலைப்பாடுகள், ஓவியங்கள், மழைநீர் சேகரிப்பு வடிவமைப்பு, மாட வீதிகளின் அமைப்பு குறித்த பாடம் உள்ளது. இதற்காக இங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். 1 குழுவிற்கு 4 பேர் வீதம் 10 குழுக்களாக ஆராய்ச்சி செய்கிறோம். இங்கு அதிகளவில் சுண்ணாம்பு காரை வீடுகள் இன்னும் பழமை மாறாமல் பயன்பாட்டில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது,” என்றனர்.