பதிவு செய்த நாள்
17
ஜன
2017
02:01
செஞ்சி: காணும் பொங்கலையொட்டி, செஞ்சி கோட்டையில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையைப் பார்ப்பதற்கு, காணும்பொங்கல் தினமான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். காலை 11:00 மணி வரை, சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. இதன் பிறகு மக்கள் கூட்டம் குவிய துவங்கியதால், ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை என கோட்டையின் அனைத்து பகுதியும் மக்கள் கூட்டத்தால் களை கட்டியது. ஆஞ்சநேயர் கோவில், வெங்கட்ரமணர் கோவில் பகுதியிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. செஞ்சி கூட்ரோட்டில் இருந்து கோட்டைக்கு செல்லும் வழி நெடுகிலும், தற்காலிக உணவகங்களும், தின்பண்ட கடைகளும் அமைத்திருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், செஞ்சி பஸ்நிலையத்தில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய தொல்லியல் துறை பராமரிப்பு அதிகாரி வரதராஜன் சுரேஷ் தலைமையில், துறை ஊழியர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். செஞ்சி பேரூராட்சி, தீயணைப்பு, சுகாதார துறையினரும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை செய்திருந்தனர்.
தாளகிரீஸ்வரர்: அனந்தபுரம் அடுத்த பனமலை தாளகிரீஸ்வரர் கோவிலிலும் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களின் வசதிக்காக செஞ்சி, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். அனந்தபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.