பதிவு செய்த நாள்
18
அக்
2011
11:10
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சியை நின்றசீர் நெடுமாறன் திறந்தவெளி கலையரங்கில் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 24ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஐப்பசி திருக்கல்யாணம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலை பொறுத்த வரையில் ஐப்பசி திருக்கல்யாணம் காந்திமதி அம்பாள் சன்னதி அருகேயுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. திருக்கல்யாணத்தை காண பக்தர் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், மண்டபத்தில் போதிய இட வசதி இல்லாமை, மண்டபத்தில் அதிக தூண்கள் ஆகிய காரணங்களால் நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் காண முடியாத நிலைமை இருந்து வருகிறது. எல்சிடி டிவி வைத்து திருக்கல்யாண நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டாலும் நேரடியாக திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லையே என்ற மனக்குறையும், ஏக்கமும் ஏராளமான பக்தர்களிடம் பரவலாக உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பொறுத்த வரையில் அங்கு நடத்தப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரடியாக பார்த்து ரசித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு பிறகு நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். இதன் மூலம் கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. ரூ.2 கோடியில் தங்கத்தேர் செய்யப்பட்டு தேரோட்டமும் நடந்துவருவதால் கோயிலுக்கு நன்கொடை வழங்க பக்தர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் உபயமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு 10 நாட்களும் இன்னிசை கச்சேரிகள், உபன்யாசம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சப்பர பவனிகளும் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள் சுவாமி சன்னதிக்கு வடக்கு புறத்தில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சியையும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பதிலாக, நின்றசீர் நெடுமாறன் திறந்தவெளி கலையரங்கில் வைத்து நடத்தவேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் ஒரு முறை பிரமாண்டமாக நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐப்பசி திருக்கல்யாணம் நிகழ்ச்சியையும் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பிரமாண்டமாக நடத்த உபயதாரர்கள் முன்வந்துள்ளனர். இதற்கு அறநிலையத்துறை நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் அனுமதி அளித்தால் நெல்லை வாழ் மக்களின் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறும். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பார்க்கும் பாக்கியமும் கிடைக்கும். இந்த விஷயத்தில் அறநிலையத்துறையின் நடவடிக்கை என்ன என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.