பதிவு செய்த நாள்
20
ஜன
2017
04:01
மனிதன் என்றாலே ஆசாபாசங்கள் அதிகம் உள்ளவன்தான்! பாசத்திற் கட்டுண்டு கிடத்தலாலே பல காரியங்கள் ஆற்ற இயலாமற் போகிறதென்பர்! அனுமனோ, உலகியல் ஆசாபாசங்கள் எதுவுமற்றவன். கடக்கப்போகும் பெருங்கடலின் கரையில் நின்று கொண்டிருந்த அனுமன், எவ்வாறு அப்படித் துணிந்து கடலில் இறங்கி சாதனை புரிந்தனன் என்பதைச் சுந்தர காண்டம் சிறப்புறச் சொல்லும்!
சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என மூன்று திசைகளிலும் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்துவிட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும் தாக்குகின்றன. இனி, தெற்கு திசை ஒன்றே உள்ளது. அதில் அனுமனை அனுப்பினால் மட்டுமே காரியம் கைகூடும் என சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை உணர்ந்த அனுமனும் தென் திசை செல்வதென்றும், திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன் மட்டுமே வருவதென்றும் திடம் கொண்ட மனத்தினனாய் மலையின் மீது நிற்கிறான். மற்றவர் நன்மைக்காக தன்னையே பணயமாக வைப்பதென்பது, எப்படிப்பட் ட தூய தியாக குணம்.
அலைகள் ஆர்ப்பரிக்கும் கடல் முன் நிற்கிறான். இக்கடலை எப்படிக் கடப்போமென ஒரு சிறிதும் சிந்திக்கவில்லை! சீதாதேவி தென்திசையில்தான் இருப்பாரா என்றும் தெரியாது; அவர் எங்கே கிடைப்பார்? ஒருவேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி அடையாளம் காட்டுவது. அவருக்குத் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது? அதை விட முக்கியம், தான் கண்டது சீதாபிராட்டிதான் என ராமனுக்கு எப்படி நிரூபிப்பது என்றெல்லாம் அனுமன் யோசித்தானில்லை! தான் ஏதோ சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் துளியும் அவனிடம் இல்லை! அவனிடம் இருந்ததெல்லாம் ராம பக்தி ஒன்றே! ராம காரியம் என்ற எண்ணம் மட்டுமே!
ஆனால், இவை எல்லாவற்றையும் எந்தவித சஞ்சலங்களுக்கும் ஆட்படாத மனத்துடன் செய்து முடிக்கிறான் அனுமன். பெருங்கடலைத் தாண்டி இலங்கை சென்று அரக்கரை அழித்து, பிராட்டியைக் கண்டு, திருவாழி மோதிரம் பெற்று, ராமனிடம் அளித்து, அனைத்து மங்கலங்களையும் நிச்சலன மனத்துடன் செய்து முடிக்கிறான்! அதில் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை! ஆனால், அனுமன் எப்போது மகிழ்ந்தான்? அன்னையின் சூடாமணி கண்டு முகம் மலர்ந்த ராமனின் மனம் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு, அனுமனுக்கு எல்லையில்லா ஆனந்தம் நிறைந்தது!
சுந்தர காண்டத்தின் மையக் கருத்தே இந்த மங்கலங்களைச் செய்த மாருதியின் செயல்தானே! அதனால்தான் சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்து மங்கலங்களை வாழ்வில் பெருக்கிக்கொள்ள வழி காட்டுகின்றனர் பெரியோர். இந்தக் காட்சியை அருணகிரிநாதர் தம் கதிர்காமத் திருப்புகழில் அழகாக அனுபவிக்கிறார். அந்தப் பாடல்...
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்... உறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்... வகையாவும்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயிர்... அவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமும்
அழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ.. தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக... எனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும்.. வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு.. வனமே சென்று
அருட்பொற் றிருவாழி மோதிரம்
அளித்துற் றவர்மேல் மனோகரம்
அளித்துக் கதிர்காம மேவிய...
பெருமாளே.
அருணகிரியார் அருளிய இந்தப் பாடலின் பொருளை மட்டும் இங்கே அனுபவிப்போம். இந்தப் பாடலை மனதூன்றிப் படித்தாலே அனுமனின் அனுக்கிரகம் மட்டுமல்ல. கந்தனின் கருணையும் சேர்ந்தே கிட்டும்.