பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
எருமப்பட்டி: ஒஸக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தொட்டு அப்ப பெருவிழாவை முன்னிட்டு, வீரக்குமாரர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. எருமப்பட்டி அடுத்த, ஒஸக்கோட்டையில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் தொட்டு அப்ப பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 25ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, மகாசண்டி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை; 8:00 மணிக்கு மாங்கல்யதாரணம்; 10:15 மணிக்கு, சக்தி அழைப்பு; மதியம், 2:00 மணிக்கு, சாமுண்டி அழைப்பு; மாலை, 6:15 மணிக்கு, மகாஜோதி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோலாட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று (நவ., 28) காலை, 10:30 மணிக்கு, மஞ்சள் நீர் மெரமனை (வசந்த உற்சவம்) நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்தனர்.