பதிவு செய்த நாள்
31
ஜன
2017
11:01
பழநி: தமிழக கோயில்களில் உள்ள நாதஸ்வரம், தவில் கலைஞர்களுக்கு பழநி கோயிலில் ’ மேம்பட்ட பயிற்சி பட்டறை’ வகுப்புகள் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் தமிழக கோயில்களில் உள்ள தவில், நாதஸ்வர கலைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், தெற்குகிரி வீதியில் பழைய பயிற்சி வளாகத்தில் ஒருமாத பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் துவக்க விழாவை சப் கலெக்டர் வினீத், இணை ஆணையர்கள் ராஜமாணிக்கம், நடராஜன், பச்சையப்பன் துவக்கி வைத்தனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம் பேசியதாவது: தமிழக கோயில்களில் உள்ள நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் திறனை வளர்த்துகொள்ளும் வகையில் கலைமாமணி பட்டம் பெற்ற வல்லுநர்கள் மூலம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் இலவசம். ஊக்கதொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் நடக்கும் ஆறு காலபூஜைகளில் மங்கள வாத்தியம் வாசிக்க வாய்ப்பு அளிக்கிறோம். ஒரு மாதபயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும், என்றார். சுவாமிமலை, உப்பிலியப்பன்கோயில், கடலுார் பாடலீஸ்வரர், திருமனஞ்சேரி உள்ளிட்ட கோயில்கள் கலைஞர்கள் பங்கேற்றனர்.