பதிவு செய்த நாள்
31
ஜன
2017
11:01
மதுரை : ”மனித இனத்தின் அமைதியைக் குலைக்கும், அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக பயங்கரவாதம் மாறியிருக்கிறது,” என, மாதா அமிர்தானந்தமயி கவலை தெரிவித்தார்.மதுரை பசுமலை மடத்தில் பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழா நடந்தது. சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதில் அவர் பேசியதாவது: இயற்கை, சுற்றுச்சூழல், விலங்குகள், மனிதர்கள், செடிகள், பறவைகளில் ஒவ்வொரு அணுவிலும் இறையாற்றல் நிறைந்து நிற்கிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் நம் மீதும், மற்றவர் மீதும், இந்த உலகத்தின் மீதும் அன்பு செலுத்த இயலும்.
புறாவின் கழுத்தில் கனமான ஒரு கல்லைக் கட்டினால் பறக்க இயலாது. அதுபோல் அன்பு என்ற புறாவின் கழுத்தில், இன்று பலவிதமான பற்றுதல் என்ற கற்களைக் கட்டி இருக்கிறோம். எனவே, சுதந்திரம் என்னும் எல்லையற்ற ஆகாயத்தில் நாம் பறக்க இயலாமல் துன்புறுகிறோம். ’நான்’, ’எனது’ என்ற கண்மூடித்தனமான சங்கிலி யால் அன்பை பிணைத்துள்ளோம்; அன்பு இல்லை என்றால் வாழ்வே இல்லை. ஆசை நிறைவேறவில்லை எனில் அழிவை ஏற்படுத்தும். கோபம், சக்தியை வீணடிக்கும். மனித இனத்தின் அமைதியைக் குலைக்கும், அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக பயங்கரவாதம் மாறியிருக்கிறது.மத வேற்றுமை, அரசியல் கருத்து வேற்றுமை, பகை, குற்றங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளால் சமுதாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. செல்வச் செழிப்பும், கல்வி அறிவும் படைத்த இளைஞர்கள் கூட சமூக விரோத அமைப்புகளில் சேர்கின்றனர்; போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். மனிதர்கள் இன்று நடமாடும் பேரழிவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இயற்கை சீற்றங்கள் மனிதரின் கட்டுப்பாட்டில் இல்லை; இருப்பினும் முன்பே அறிந்து கொள்ளும் வகையில் தொழில் நுட்பங்கள் உள்ளன. மனிதன், தன் மனதில் சுமந்து கொண்டிருக்கும் பேரழிவு களை முன்பே அறிந்து கொள்ள உதவும் இயந்திரத்தை, அறிவியல் தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை.அமைதியாக உள்ள குளத்தில் ஒரு கல்லை எறிந்தால், முதல் சிற்றலை அந்த கல்லைக் சுற்றித்தான் தோன்றும். அந்த சிற்றலையின் வட்டம் பெரிதாகி, மெல்ல மெல்ல குளக்கரையை சென்றடையும். அதுபோல் அன்பு, நமக்குள்ளே இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். ஒருவருக்குள் இருக்கும் அன்பை துாய்மைப்படுத்தினால், மெல்ல அது பெரிதாகி உலகம் முழுவதும் பரவும்.இவ்வாறு பேசினார்.